Rs 30,000 fine for felling trees in Perambalur Town

பெரம்பலூரில் முக்கிய சாலையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான வேப்ப மரங்களை வெட்டியதாக 3 வணிக வளாக உரிமையாளர்களுக்கு ரூ.30ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூரில் வெங்கடேசபுரம் பிரதான சாலையில் வணிக வளாகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என வேகமாக வளர்ந்து வருகிறது. இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நிழல்தரும் வகையில் மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் கட்டிட உரிமையாளர்கள் 3 பேர் தங்களது வணிக வளாகங்கள் முன்பு வேப்பமரங்கள் இடைஞ்சலாக இருப்பதாக கூறி 2 நாட்களுக்கு முன்பு கூலி ஆட்களை வைத்து, 3 வேப்ப மரங்களை வெட்டி அறுத்து எடுத்துவிட்டனர்.

இதுகுறித்து பெரம்பலூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர்களுக்கு பொதுமக்கள் மற்றும் இயற்கை சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மூலம் புகார்கள் சென்றது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோட்ட பொறியாளர் சக்திவேல், உதவி கோட்ட பொறியாளர் பாபுராமன் மற்றும் உதவி பொறியாளர் ஜெயலட்சுமிக்கு அறிவுரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து வெங்கடேசபுரத்திற்கு சென்ற நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், 3 கட்டிடங்கள் முன்பு இருந்த வேப்ப மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததையும், அதன் கிளைகளை அகற்றப்பட்டிருந்ததையும் பார்த்தனர். பின்பு கட்டிட உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக, வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் 3 பேருக்கும் தலா ரூ.10ஆயிரம் வீதம் ரூ.30ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வெட்டப்பட்ட மரங்களின் கிளைகளை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை நெடுஞ்சாலைத்துறை கணக்கில் செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டது,

மேலும், பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட மரங்களை வெட்டி சேதப்படுத்துவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பதோடு, அபராதமும் விதிக்கப்படும் என்று கோட்ட பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே பெரம்பலூர் நகரில் ஏற்கனவே வளர்ந்துள்ள மரங்களை, பெயிண்ட் வர்ணங்களை கொண்டு எண்ணால் எழுதி பட்டியலிட நெடுஞ்சாலைத் துறையினரும், நகராட்சி நிர்வாகமும் முன்வர வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!