Rs 33643225 for 787 cases in the National People’s Court at Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் இன்று நடப்பு ஆண்டின் இரண்டாவது தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. பல்கீஸ் தலைமையில் நடைபெற்றது. மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ். முத்துகுமரவேல், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஏ. தனசேகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செயலாளர்/சார்பு நீதிபதி ஆர். லதா, சப்-கோர்ட் சார்பு நீதிபதி எஸ். அண்ணாமலை, நீதித்துறை நடுவர்கள், பி. சுப்புலட்சுமி, ஆர். சங்கீதா சேகர், வி. சிவகாமசுந்தரி, வேப்பந்தட்டை உரிமையியல் நீதித்துறை நடுவர் எஸ்.பி பர்வதராஜ் ஆறுமுகம் மற்றும் குன்னம் உரிமையியல் நீதித்துறை நடுவர் எஸ். கவிதா ஆகியோரின் முன்னிலையில் 6 அமர்வுகளாகவும், வங்கி வழக்குகள் தொடர்பாக ஒரு அமர்வும் மொத்தம் ஏழு அமர்வுகளாக நடைபெற்றது.

தொடக்க நிகழ்வில் தலைமையேற்று முதன்மை மாவட்ட நீதிபதி, பொதுமக்கள்(வழக்காடிகள்) தங்களுக்குள் இருக்கும் பகையினை மறந்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சமாதான முறையில் மக்கள் நீதிமன்றங்களில் தங்களது வழக்குகளை முடித்துக் கொள்ளும் போது, தேவையற்ற மன உளைச்சல்களிலிருந்து விடுபட்டு, கால விரையத்தையும் தவிர்த்து, வெற்றி தோல்வி என்பது இரு தரப்பினருக்கும் இல்லை என்ற மனநிலையில் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்கிறது என்றும்,

விரைவாக மக்கள் நீதிமன்றங்களில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லாமல் இருப்பதாலும், நிரந்தரமான தீர்வாக கிடைப்பதாலும் வழக்கு உடனடியாக முடிவிற்கு வந்து விடுகிறது என்றும், இது போன்ற வாய்ப்புகளை வழக்காடிகள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செயலாளர்/சார்பு லதா வரவேற்றார். நீதித்துறை நடுவர் சங்கீதாசேகர் நன்றி கூறினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டுள்ள வகையில் 55-வங்கி வழக்குகளில் ரூ.25,71,225/-ம், 45-மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.2,75,89,200/-ம், 09-சிவில் வழக்குகளில் ரூ. 20,50,000/-ம் 01-காசோலை வழக்கில் ரூ.10,00,000/-ம் 677-சிறு குற்ற வழக்குகளில் ரூ.4,32,800/- ஆக மொத்தம் 787-வழக்குகளில் ரூ.3,36,43,225/-த்திற்கு தீர்வு காணப்பட்டது.

வழக்கறிஞர் சங்க செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட் அசோசியேசன் நிர்வாகி வழக்கறிஞர் முத்தமிழ்ச்செல்வன், வழக்கறிஞர்கள் முகமது இலியாஸ், மணிவண்ணன், துரை பெரியசாமி, அருணன், அறிவழகன், அரிராமன் மற்றும் இதர வழக்கறிஞர்கள், காவல் துறையினர், நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளார்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!