Sipcot Industrial Park in Perambalur – Eraiyur ; Tamil Nadu Chief Minister M.K.Stalin laid the foundation stone and signed agreements with 10 companies including footwear companies: employment for 2500 people!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம், பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்து, இத்தொழில் பூங்காவில் அமையவுள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாகவும், முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதரத்தை வலுவடையச் செய்யவும், தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசின் 2022-23-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழில் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தோல்பொருட்கள் துறையில், தமிழ்நாடு பாரம்பரிய பெருமையை கொண்டுள்ளது. உலகளவில் தோல் இல்லாத காலணிகளின் நுகர்வும், விளையாட்டு காலணிகளுக்கு நுகர்வோர் விருப்பமும் அதிகளவில் உள்ளது. மேலும், இத்துறையில் அதிக வளர்ச்சி மட்டுமின்றி, மிகப்பெரிய ஏற்றுமதி சாத்தியக் கூறுகளும் உள்ளன. அத்துடன் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாகவும் இத்துறை விளங்குகிறது.

இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, முதலமைச்சர் அவர்களால் 23.8.2022 அன்று துறை சார்ந்த காலணிக் கொள்கை வெளியிடப்பட்டது. காலணிக் கொள்கையின் கீழ், காலணி ( செருப்பு, ஷீ) உதிரி பாகங்களின் தொகுப்பு உற்பத்தி நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க உயர்வு அடையாளம் காணப்பட்டு, அதில் கவனம் செலுத்தப்பட்டு, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காலணி உற்பத்தி செய்யும் தொகுப்பு தொழில் நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே முதலமைச்சரால் இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் ஒரு காலணி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், எறையூர் இரண்டாவது காலணி பூங்காவாக இருக்கும்.

இதன் தொடர்ச்சியாக, குறுகிய காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்திக்கான தனிக் கொள்கை வெளியிடப்பட்ட 23.8.2022 அன்று கோத்தாரி ஃபீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துடன் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. அதன் மூலம், 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.

முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக ரூ.740 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 4,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது. ஆக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.2,440 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 29,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கப்படவுள்ளது.

இந்த 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் சேர்த்து, எதிர்காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் தோல் அல்லாத காலணி மற்றும் அதன் தொகுப்பு தொழில் நிறுவனங்களின் மூலம் ரூ.5,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என்றும், 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதன் மூலமாக பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சி மேலும் உயர்நிலை அடையும், என தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா, விசிக தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், கலெக்டர் வெங்கடபிரியா, எம்.எல்.ஏ பிரபாகரன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ. சுந்தரவல்லி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, கோத்தாரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜின்னா ரஃபிக் அஹமத், எவர்வேன் நிறுவனத்தின் தலைவர் ராங் வு சேங் (Mr. Rong Wu Chang),

திமுக மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் இரா.ப.பரமேஷ்குமார், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், மாவட்ட சேர்மனுமான குன்னம் சி. ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், ஒன்றிய சேர்மன்கள் என்.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), பிரபாசெல்லப்பிள்ளை (வேப்பூர்), மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), க.ராமலிங்கம் (வேப்பந்தட்டை), திமுக மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில் சன்.சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு.நீலமேகம் , முன்னாள் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் , மகாதேவிஜெயபால், பொறியாளர், நகராட்சி கவுன்சிலர் துரை.காமராஜ் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!