Special Camp for Linking Aadhaar Number with Voter ID Card: Perambalur Collector visited.
பெரம்பலூர் மாவட்டம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி மையத்திலும், எளம்பலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி மையத்திலும் நடைபெற்ற வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமினை வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது.
விளம்பரம்:
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147 பெரம்பலூர் மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 653 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் இன்று (04.09.2022) நடைபெற்றன. பொதுமக்கள் ஆர்வத்துடன் தாமாக முன்வந்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க ஏதுவாக படிவம் – 6பி யினை தாக்கல் செய்தனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண்கள் 187 முதல் 202 வரையிலும், பெரம்பலூர் வட்டம் எளம்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி எண்கள் 157 முதல் 164 வரை உள்ள பாகங்களுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வட்டாட்சியர்கள் கிருஷ்ணராஜ் (பெரம்பலூர்), சீனிவாசன் (தேர்தல்) உள்பட பலர் உடனிருந்தனர்.