Special Siddha medical camp for the rainy season in Perambalur; Collector inaugurates it!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சார்பில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமினை கலெக்டர் ப.அப்துல் ராசிக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, சித்த மருத்துவத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படும் புறமருத்துவத்தில் ஒரு சில முறைகளான சித்தர்வர்மம் மற்றும் சித்தர்தொக்கணம் ஆகிய மருத்துவ முறைகள் வழங்கப்பட்டது. மேலும், மழைக் காலங்களில் பொதுமக்களுக்கு பரவலாக ஏற்படக்கூடிய சளி, இருமல், காய்ச்சல், டெங்கு, சிக்கன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்களுக்கு நிவாரணமாக நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், தாளிசாதி சூரணம், ஆடாதோடை மணப்பாகு ஆகிய மருந்துகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கான இளம் தளிர் திட்டம் மற்றும் மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் திட்டம் ஆகிய திட்டங்களின் பயன்கள் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், பொதுமக்கள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தக் கூடிய மற்றும் தங்களது வீடுகளில் எளிதில் வளர்க்க வேண்டிய அத்தியாவசிய செடிகள் குறித்த மூலிகை செடிகள் கண்காட்சி மற்றும் சித்த மருந்துகள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
டி.ஆர்.ஓ க.கண்ணன், ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வத்சலா, பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயன், பெரம்பலூர் மாவட்ட அரசு சித்த மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.









