State Registrar Shanmugasundaram examines the activities of cooperative societies in Perambalur!

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆண்டுக்கு 300 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது என கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்

பெரம்பலூர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில், தொடக்க வேளாண்மை சங்கங்களை விவசாயிகளுக்கான சேவை மையம் மாற்றுவது குறித்தும், கூட்டுறவு துறையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் கூட்டுறவு துறை அலுவலர்கள், செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலமாக 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி செய்ய பயிர்க்கடன், விவசாயிகளுக்கான உடனடி தேவைக்கான நகை ஈட்டுக்கடன், விவசாயிகளுக்கான பிற தேவைகளுக்கு மத்திய கால கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் டாம்கோ டாப்செட்கோ கடன் ஆகிய கடன்களை விவசாயிகளுக்கு வழங்கி விவசாயிகளுடைய முதுகெலும்பாக செயல்படுகின்ற அமைப்பாகும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆண்டுக்கு ரூ.300 கோடி பயிர்க்கடனாகவும், ரூ.600 கோடி நகை ஈட்டுக் கடனாகவும், ரூ.10 கோடி மாற்றுத்திறனாளிகள் கடனாகவும், ரூ.60 கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனாகவும் வழங்கி விவசாயிகளுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துகின்ற அமைப்பாக செயல்பட்டு வருகின்றது. அதனுடைய அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி விவசாயிகளுக்கு சீரிய முறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சேவை புரிவதற்கான அமைப்பாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகள் வேளாண் தொழில் புரிவதற்கான இதர தேவைகளான உரம், பூச்சி மருந்து, விவசாய இடுபொருட்கள் ஆகியவற்றையும் வழங்கி விவசாயத் தொழிலுக்கான ஒரு கேந்திரமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சங்க உறுப்பினர்களுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும், அரும்பாவூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்கத்தில் உறுப்பினர்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் கடனுதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து பெரம்பலூர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு மருந்தகம், பூலாம்பாடி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு சொந்தமான காலி இடத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு கிட்டங்கி அமைப்பதற்கான இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் நிருபர்களிடம் கூறுகையில், விவசாயிகளுடைய வேளாண் தொழிலை மேம்படுத்தி விவசாயிகளுடைய பொருளாதாரத்தை உயர்த்துகின்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கிராமப்புறங்களில், விவசாயிகளுக்கான சேவை மையமாக மாற்றி விவசாய தொழிலுக்கு முன்னும், பின்னும் ஏற்படுகின்ற அனைத்து தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்கிற அமைப்பாக மாற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டு தொடர்ந்து, கூட்டுறவுத்துறை அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உடைய செயலாளர்களுடன் கூட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேவை மையங்களாக மாற்றுவதற்கான அடிப்படை கூறுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது என தெரிவித்தார்.

ஆய்வு கூட்டத்தில் பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பாண்டியன், பெரம்பலூர் சரக துணை பதிவாளர் பாண்டிதுரை, பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!