Subsidized post-harvest value-added machinery for farmers; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ளள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் “அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்பமதிப்புக் கூட்டு இயந்திரங்கள் மானியத்தில் வழங்குதல்” திட்டத்தினை 2020-21 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்க ரூ.9.41 இலட்சம் மானிய ஒதுக்கீடு வரப் பெற்றுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக் கூட்டி, அதிக விலைக்கு விற்று இலாபம் பெற்றிட மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் பெரிதும் உறுதுணையாக உள்ளன.

வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் இயந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம், கால்நடைதீவனம் அரைக்கும் இயந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு இயந்திரம், வாழைநார் பிரித்தெடுக்கும் கருவி போன்றவை விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மானிய விலையில் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் பெற்று பயனடைய விருப்பமுள்ள விவசாயிகள் எளம்பலூர், தண்ணீர் பந்தலில் உள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை (அல்லது) மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களை mis.aed.tn.gov.in <http://mis.aed.tn.gov.in> என்ற இணையதளத்திலிருந்து அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!