Successive thefts near Arumbavoor in Perambalur district: Police investigating!
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அருகே ஆவின் பால் கொள்முதல் நிலையம் மற்றும் மளிகைக் கடை, வீட்டின் பூட்டை உடைத்து எடை மெஷின், பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேப்பந்தட்டை வட்டம், விஜயபுரத்தில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு ஆவின் பால் கொள்முதல் நிலையத்தை செயலர் கணபதி மகன் ரங்கராஜன் (45) என்பவர் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார், இன்றுஅதிகாலை அதன் விற்பனையாளர் ஜெயகநாதன் மகன் இளங்கோவன் (46), வந்து பார்க்கும்போது, நிலையத்தின் இரும்புக் கதவின் 3 பூட்டுகளை உடைத்து உள்ளேயிருந்த எடை மெஷின் மற்றும் ஊக்கத் தொகை கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
இதே போல, விஜயபுரத்தைச் சேர்ந்த நடேசன் மகன் பன்னீர்செல்வம் (47). இவர், அதே கிராமத்திலு்ள மாரியம்மன் கோயில் அருகே டீக்கடை மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையை பூட்டி விட்டு சென்றிருந்த பன்னீர் செல்வம், இன்றுஅதிகாலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ. 34 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல, அதே பகுதியைச் சேர்ந்த நடேசன் மனைவி தனக்கொடி (70) தனியாக வசித்து வருகிறார். இவர்,நேற்றிரவு தனது வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து வீட்டில் தூங்கிவிட்டு இன்று அதிகாலை வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ரூ. 2 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித் தனியாக கொடுத்த புகாரின் பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்கள் அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.