“Teachers in Anbil” : Under the leadership of School Education Minister Anbil Mahes Poiyamozhi was held in Perambalur.

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அரங்கில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான “ஆசிரியர்களுடன் அன்பில்“ என்ற நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில் நடைபெற்றது.

பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சி சேர்மன்.சி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், மாணவர்களின் மீது மிகுந்த அக்கறை கொண்ட காரணத்தினால் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற மாணவர்களின் தனித்திறனை வளர்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்க கூடாது என்பதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டிற்கு மையப்பகுதியாக இருக்கும் திருச்சி மாவட்டத்தில் பிரத்யேகமாக இதற்கென ஒரு தனி அலுவலகம் அமைத்து, தனி அலுவலரை நியமித்து பிரத்யேகமாக “ஆசிரியர் மனசு” என்ற பெட்டி வைக்கப்பட்டு, அதன் மூலம் பெறப்படும் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திருச்சிக்கு வர இயலாது என்பதாலும், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை இருந்த இடத்திலிருந்தே எளிதில் தெரிவிக்கும் வகையில் ஆசிரியர் மனசு என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

விளம்பரம:

அரசாணை எண் 101 மற்றும் 108 குறித்த கோரிக்கைகளை 10ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டிற்கு முன்பாகவே முடித்துவிட வேண்டும் என்பதன் அடிப்படையில் கோப்புகளை தயார் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அதற்கு விரைந்து தீர்வு காண்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு தொடர்ந்து ஆசிரிய பெருமக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதனை பூர்த்தி செய்யும் நிகழ்வாக “ஆசிரியருடன் அன்பில்” என்ற இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றது.

சிறப்பான தேர்வு முடிவுகளை கொடுத்து தமிழ்நாட்டிற்கு முன்னோடி மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்களை பார்த்து மற்ற மாவட்ட ஆசிரியர் பெருமக்களும் இதனை ஆரோக்கியமான ஒரு போட்டியாக கருதி தங்களது மாவட்டம் முன்னுக்கு வருவதற்கு எல்லா விதத்திலும் அவர்கள் பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

“ஆசிரியப் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி” என்ற வரிகளுக்கு ஏற்ப தங்களையே முழுமையாக அர்ப்பணித்து, மாணவ மாணவிகளை சமுதாயத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு ஏற்றி விடும் ஏணிகளாகவும், பல்வேறு இடர்களைக் கடந்து அவர்கள் கரை சேர உதவும் தோணிகளாகவும் விளங்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், என பேசினார்.

முன்னதாக, 2021-22 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த 33 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த 16 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 49 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சிறப்பாக பணியாற்றி பெரம்பலூர் மாவட்டத்தை கல்வியில் முன்னோடி மாவட்டமாக மாற்றியதற்கு பாடுபட்ட ஆசிரியர்களை பாராட்டும் வகையில் முதன்மை கல்வி அலுவலரிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கினார். ஆசிரியர்களுடன் உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.

இதில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி செயலாளர் நீல்ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், தேசிய நல்லாசிரியர் தங்கம்மூர்த்தி, எழுத்தாளர் – ஆசிரியர் சதிஷ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!