The decision to raise petrol and diesel prices Struggle announcement! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.86.28ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்ந்து ரூ.78.49 ஆகவும் அதிகரித்திருக்கிறது. ஏழை மக்களின் நலனில் அக்கறையின்றி எரிபொருள் விலையை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கிய விலை உயர்வு நீடிக்கிறது. கடந்த 43 நாட்களில் ஒருமுறை கூட பெட்ரோல்-டீசல் விலைகள் குறைக்கப் படவில்லை. அதேநேரத்தில் கடந்த 43 நாட்களில் பெட்ரோல் விலை 40 முறை ரூ.6.14 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 43 நாட்களில் 35 முறை ரூ.5.90 உயர்த்தப்பட்டு ரூ.78.49 என்ற உச்சத்தை எட்டியிருக்கிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தினமும் நிர்ணயிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21.00 ரூபாயும், டீசல் விலை 21.61 ரூபாயும் உயர்த்தப் பட்டுள்ளன. இது முறையே 32.%, 38% உயர்வு ஆகும். கடந்த 15 மாதங்களில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எந்தப் பொருளும் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்படவில்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ 100 டாலர் என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே அளவிலான வரி விகிதமும், ரூபாய் பணமதிப்பும் தொடர்ந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110 என்ற அளவுக்கு அதிகரிப்பதை தடுக்க முடியாது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் சரக்குந்து வாடகை 23% முதல் 25% வரை உயர்த்தப்பட்டுள்ளன. அதன் அடுக்கடுக்கான விளைவுகள் தென்படத் தொடங்கிவிட்டன. அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. சென்னையில் விருப்பம் போல பயணிப்பதற்கான மாதந்திர பயணக் கட்டண அட்டையின் விலை 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக, அதாவது 30% உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல மேலும் பல பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் வாழ்வதற்கு வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.
மக்களின் துயரத்தையும், சுமையையும் குறைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. ஆனால், அவை இரண்டுமே எரிபொருள் விலை உயர்வால் கிடைக்கும் லாபத்தை மட்டும் தான் கணக்கிடுகின்றனவே தவிர மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டுகொள்வதில்லை.

2014- 2016- காலத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, அதன் பயன்களை மக்களுக்கு அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. மாறாக, பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் வருவாய் ஈட்டியது. கலால் வரிக் குறைப்பு குறித்து பலமுறை செய்தியாளர்கள் கேட்ட போது,‘‘பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்திய அரசு ஒரு கட்டத்தில் குறைக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படும் போது இதை மத்திய அரசு செய்யும்’’ என்று கூறினார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் ரூ.12 லட்சம் கோடி ஈட்டிய பிறகும் வரிகளைக் குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை.

மற்றொருபுறம் மாநில அரசின் கொள்ளையும் தொடர்கிறது. தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.21.89, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.70 வீதம் மதிப்புக் கூட்டு வரி கிடைக்கிறது. இது தவிர மத்திய அரசு வசூலிக்கும் கலால் வரியில், மாநில அரசின் பங்காக பெட்ரோலுக்கு ரூ.8.18, டீசலுக்கு ரூ.6.47 கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டால் ரூ.30.07, டீசல் விற்கப்பட்டால் ரூ.22.17 வரியாக கிடைக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழக அரசுக்கு ரூ.470 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இது ரூ.600 கோடியாக அதிகரிக்கும். நடப்பாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் ரூ.4000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் எனும் போது அதை விட்டுக்கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை ரூ.5.00 வரை குறைக்க முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தயாராக இல்லை.

மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 5&ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை உட்பட அனைத்து மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் இடங்கள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!