The gates of heaven are opened at the Perambalur Madanagopala Swamy Temple on the occasion of Vaikunta Ekadashi!
பெரம்பலூரில், இன்று காலை 5.30 மணியளவில் பெரம்பலூர் ஸ்ரீ மதனகோபால சுவாமி ஆலயத்தில் உற்சவர் நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து சிம்மகதியில் புறப்பட்டு கொடிமரம் வழியாக நாழி கேட்டான் வாசலுக்கு வந்தார். பின்னர், ஐதீகப்படி சரியாக காலை 6.00 மணி அளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்பு, ஆலய பரம்பரை ஸ்தானீகர் மணிகண்டன் அய்யர் ஸ்தானீகர் வேத விண்ணப்பம் வாசித்த பின் கட்டியம் கூற ஸ்தானீகருக்கு முதல் மரியாதை செய்த பின்னர், கோயில் நிர்வாகி, திருக்கோயில் கைங்கர்யக்காரர், முக்கிய பிரமுகர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து அக்ரஹார வீதியின் வழியாக கம்பத்து ஆஞ்நேயர் திருச்சுற்றுக்கு பின் ஆண்டாள் சன்னதியில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார் .
இதில் கோயில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், முன்னாள் தர்மகர்த்தா தெ.பெ. வைத்தீஸ்வரன், குமார், பூக்கடை சரவணன், கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள், கோயில் பணியாளர்கள், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.