To control the rise in the price of construction materials, the construction and land industry federation insists!
தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில இணை செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் யுவராஜ், கண்ணன், மாநில பொருளாளர் ஜெகதீசன், மண்டலத் தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் காலிமனைவரி மற்றம் வீட்டுவரி ரசீது விரைவாக வழங்க ஆவணம் செய்யவேண்டும், இணையவழியில் பதிவு செய்தபின் 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கவேண்டும், பெரம்பலூரில் திறன்மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில்போடப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி, சிறப்பு பொருளாதாரம் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தவேண்டும், கிராவல் எடுப்பதற்கு முன்பு இருந்த எளிய நடைமுறையையே பின்பற்றவேண்டும், கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி கட்டுமான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பொறியாளர்கள் சீனிவாசன், கிரி, குணாளன், ரவி, வேல்முருகன், விஜய் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.