Women SHG products for the College market, perambalur happens from today until the day after tomorrow.

பெரம்பலூர் : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பில் கல்லூரி தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் வகையிலான கல்லூரி சந்தை இன்று முதல் நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கான கல்லூரி சந்தையினை ஆட்சியர் சாந்தா இன்று தொடங்கி வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.

இக்கல்லூரி சந்தையில் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரி மாணவ மாணவியர்களின் மத்தியில் பிரபலப்படுத்தவும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் விற்பனையை அதிகரித்திடவும், ஒவ்வொரு ஆண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் “கல்லூரி சந்தை” என்ற பெயரில் மூன்று நாட்கள் விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் வெளி மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர் போன்ற மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது தயாரிப்புகளான சணல் பை, தோல் பொருட்கள், கவரிங் நகைகள், கிப்ட் பாக்ஸ், ஆயுர்வேத பொருட்கள், திண்பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட விற்பனை பொருட்களை சந்தைப்படுத்தினர்.

இவ்விழாவினை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் மற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி முறை கேட்டுணர்ந்து தங்களது பொருட்களுக்கும் உரிய மதிப்பு கூட்டு முறையை பின்பற்ற வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. வரதராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவித் திட்ட அலுவலர் எஸ். மணிமேகலை, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் சங்கர், உள்ளிட்ட தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், உதவி முதல்வர் மற்றும் அனைத்து பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!