Worship in village near Perambalur, 144 prohibition order; RTO directive
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூரில் கோயில் திருவிழாவை முன்னிட்டு இருபிரிவினரிடையே அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு
6 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ராயப்பர், செல்லியம்மன், மாரியம்மன் கோயில்களின் திருவிழாவை ஒரு பிரிவினர் நேற்று முன்தினம் 28 ம் தேதி தொடங்கி இன்று 30 ம் தேதி வரை நடத்துவது எனவும், அதனைத்தொடர்ந்து 3
நாட்கள் சுவாமி வீதி உலா நடத்துவது எனவும் முடிவு செய்திருந்தனர்.
இதற்கு மற்றொரு பிரிவினர் எங்கள் தெருவழியாக கடந்த ஆண்டு நடத்தியது போல ஒரு நாள் மட்டுமே சுவாமி வீதியுலா நடத்த வேண்டும் மூன்று
நாட்கள் வீதி உலா நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக இருபிரிவினரையும் அழைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முறை அமைதி
பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஆண்டைப் போலவே ஒரு நாள் மட்டும் சுவாமி வீதி உலா நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஆனாலும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. திருவிழாவை நடத்தும் பிரிவினர் திட்டமிட்டப்படி நாங்கள் ஆண்டாண்டு காலமாக எப்படி சுவாமி வீதி உலா நடத்துவோமோ அதே போல் தற்போதைய திருவிழாவின் போதும் 3 நாட்களும் சுவாமி வீதிஉலா நடத்தியே தீருவோம் என திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம் செய்யத்தொடங்கினர்.
இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இந்த பகுதியில் இருபிரிவினரிடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலையை தவிர்க்கும் பொருட்டு பெரம்பலூர் கோட்டாச்சியர் விசுவநாதன் வி.களத்தூரில் நேற்று முன்தினம் 28 ம் தேதி இரவு 9 மணி முதல் தொடங்கி வரும் 4 ம்தேதி இரவு 9 மணி வரை 6 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போட்டுள்ளார்.
தடை உத்தரவு காலங்களில் உள்ள நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்புக்காக 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.