பெரம்பலூர் தொகுதி மக்களின் நீண்டநாள் கனவான அரியலூர் – நாமக்கல் இடையேயான புதிய ரெயில் திட்டத்தினை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த பெரம்பலூர் எம்.பி ஆர்.பி.மருதராஜா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்.
நடைபெற்றுவரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடாரின்போது, மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பி.மருதராஜா பேசியதாவது: பெரம்பலூர் தொகுதி மக்களின் சார்பாக பெருமைமிக்க அவையில் பேச வாய்ப்பளித்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அரியலூரிலிருந்து நாமக்கலுக்கு பெரம்பலூர், துறையூர், தாத்தையங்கார்பேட்டை வழியாக புதிய ரெயில்தடம் அமைக்கவும், புதிய ரெயில் சேவை தொடங்கவும் பலமுறை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கும், துறை அதிகாரிகளிடத்திற்கும் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடமிருந்து இதுவரை எந்தபதிலும் வரவில்லை, எனவே இதுதொடர்பாக ஆய்வு நடத்த அனுமதி அளித்து புதிய ரெயில் பாதையினை அமைக்க வருகின்ற பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும், பெரம்பலூர் தொகுதி மக்களின் நீண்டநாள் கனவாக உள்ள இந்த ரெயில்வே திட்டத்தினை தொடங்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டால் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பி.மருதராஜா பேசினார்.