எழுத்தாளரும், குவைத் ஃப்ரன்ட் லைனர்ஸ் அமைப்பின் நிறுவனர் என்.சி.மோகன்தாஸ் அவர்களின் பன்முகச் சிறப்புகள் பரிமளிக்கும் வண்ணம் “அன்பு பாலம்” ஜூலை மாத இதழ் என்.சி.மோகன்தாஸ் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அந்த இதழின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. குழந்தைக் கவிஞர் பேரவை தலைவரும், படைப்பாளர்களின் ஏணியாக விளங்கி வருபவருமான திரு. பி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். இதழை பாலம் கல்யாணசுந்தரம் வெளியிட்டார். திரு. லேனா தமிழ்வாணன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.நிகழ்வின் துவக்கத்தில் எழுத்தாளர் கே. ஜி. ஜவஹர் புல் புல்தாரா இசை விருந்து அளித்தார்.ஃப்ரன்ட் லைனர்ஸ் தலைவர் திருமதி. ஆனந்தி நடராஜன், லேனா தமிழ்வாணன், கவிப்ப்ரியா, முனைவர் சி.ஆர். மஞ்சுளா மறைமலை, மக்கள் குரல் ராம்ஜி, என். ஆர்.சம்பத் , நூருல்லா , வான்மதி , எழுத்தாளர் கார்முகிலொன், முத்துசீனிவாசன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரைத்துச் சிறப்பித்தனர். முனைவர். தாமோதரக்கண்ணன் வரவேற்புரை நல்க, கன்னிக்கோவில் ராஜா நன்றியுரை வழங்கினார். விஜை ஆனந்த் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.லேனா தமிழ்வாணன் அவர்களின் உரை அனைவர் உள்ளத்தையும் கவ்வி இழுக்கும் வண்ணம் அமைந்தது போலவே, விழா நாயகர் வழங்கிய ஏற்புரை உயர்நோக்க நல்லெண்ண விதைகளை விதைத்து வளர்க்கும் விதம் அமைந்திருந்தது. மோகன்தாஸ்..தன் வளர்ச்சிக்கு வித்திட்ட..திருவாளர்கள் – பி. வெங்கட்ராமன், நண்பன் மனோகர், தினமலர் அந்துமணி, யோகா, ப்ரியா கல்யாணராமன், கே. ஜி.ஜவஹர்…….. போன்ற அனைவரையும் கவுரவித்து நன்றி தெரிவித்தார்.பல்துறைச் சான்றோர்கள், கவிஞர்கள் என்று அரங்கம் நிரம்பி ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தது. இவ்விழா மூலம் 3 லட்சம் ரூபாய் நிதி உதவி சிறு பத்திரிக்கைகள், மருத்துவ மற்றும் படிப்புக்கு..என வழங்கப்பட்டது.