Perambalur: “I Love the Third Man”—A. Raja MP Speaks at Book Launch Ceremony!

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கீதா ரெஸ்டாரண்ட் மாடியில், பணி நிறைவு செய்த துணை வணிகவரி அலுவலர் ஆ. துரைசாமி என்பவர் எழுதிய பாபாசாகேப் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் சிலை அல்ல எரிமலை என்னும் நூல் வெளியீட்டு விழா முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொது செயலாளருமான ஆ ராசா எம்.பி., தலைமை ஏற்று நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார் .அப்போது அவர் பேசியதாவது:

என்னோடு வருகை தந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஏனைய நிர்வாகிகளே, பெரியோர்களே, தாய்மார்களே, உறவினர்களே, அம்பேத்கர், பெரியார் கொள்கையின் பால் ஈடுபாடு உள்ள கொள்கை வீரர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு அரசு அலுவலராகப் பணி ஏற்று, ஆதிதிராவிட சமுதாயத்தில் தலித் சமுதாயத்தில் பிறந்து, அரசுப் பொறுப்பிற்குப் போகிற போது, குடும்பம், மனைவி, மக்கள் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு, அதற்குப் பிறகு தன்னுடைய நண்பர்கள் என்று ஒரு வெளி வட்டத்திலே உறவை ஏற்படுத்திக் கொண்டு, ஓய்வு பெறுகிற போது, பிள்ளைகள் எல்லோரும் வேலைக்குப் போய்விட்டார்களா? நமக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டோமா? என்று வாழ்வது தான் சராசரி மனிதனுடைய வாழ்க்கையாக இருந்து வருகின்ற சமூகத்தில், பணியில் இருக்கிற போதே பெரியார், அம்பேத்கர் பால் ஈடுகொண்டு, அவருக்கு வருகின்ற அரசு ஊதியத்தில் ஒரு பகுதியை, அதற்காகக் கூட்டம் போட்டு, கவியரங்கமாக இருந்தாலும், கருத்துரையாக இருந்தாலும், அப்போதே எங்களைப் போன்றவர்களை எல்லாம் அவர் பணியாற்றிய ஆத்தூருக்கு அழைத்து, அரசுப் பணியோடு, “என் குடும்பம் மட்டுமல்ல, என் உறவுகள் மட்டுமல்ல, இந்தச் சமூகமும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்” என்கின்ற அந்தச் சமூகப் பார்வையை கொண்டவர் தான் அன்பிற்குரிய அண்ணன் துரைசாமி அவர்கள்.

அவர்கள் அப்படி என்றால், சில நேரங்களில் துணைவியார், “உங்களுக்கு வேலை இல்லையா? வெட்டி இல்லையா? நாம் உண்டு நாம் இருக்க வேண்டும் என்றுதானே சொல்லியிருக்கிறோம்? எதற்காக இவ்வளவு பேரைக் கூட்டி வந்து திடீரென்று சாப்பாடு கேட்கிறீர்கள்? ஒரு பகுதி பணத்தை ஏன் இப்படியெல்லாம் செலவு செய்கிறீர்கள் ஊதாரித்தனமாக? பெரியாரையும் அம்பேத்கரையும் தூக்கிப் பிடிப்பதால் நம்முடைய பேரப் பிள்ளைகளுக்கு என்ன வந்து போடப்போகிறது?” என்று சொல்லக்கூடிய மனைவிமார்கள் தான் அதிகம்.

ஆனால், அவர் பக்கத்திலே இருக்கிற அண்ணியார் அவர்கள், தன்னுடைய கணவன் என்ன கொள்கையை முன்னெடுத்துச் சென்று வெற்றி பெற வைக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அதற்குத் துணையாக இருப்பது தான் வாழ்க்கைத் துணை என்கின்ற அந்த அடிப்படையில், அவரோடு துணையாக நின்று பணியாற்றி அவரை இந்த வெளி உலகத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார்.

“யார் நல்ல மனிதர்?” என்று கெவின் லூயிஸ் என்கின்ற ஒரு அறிஞரிடம் கேட்டபோது, “இந்த உலகத்திலே மூன்று மனிதர்கள் பிறக்கிறார்கள், அல்லது மூன்று விதமான மனிதர்களைப் பேசுகிறார்கள். ஒன்று, இந்த உலகத்தைத் திருத்த வேண்டும் என்பதற்காக இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்து, அந்த அவதாரத்தில் செய்ய வேண்டிய காரியங்களை, சீர்திருத்தங்களை எல்லாம் செய்து, மீண்டும் கடவுளாகப் போய்விடுவது. இப்படி ஒரு மனிதன் இருக்கிறான் என்று நம்புகிறார்கள்.”

“இன்னொரு மனிதன், மனிதனாகப் பிறந்து, உயர்ந்த தவத்தால், அல்லது ஒழுக்கத்தால் இறைவனையே எண்ணி வாழ்ந்து, இறைவனோடு இணைந்து விடுவது. இறைவனாகப் பிறப்பது, மனிதனாக வாழ்வது, மனிதனாகப் பிறப்பது, இறைவனோடு சேர்ந்து விடுவது. இது இரண்டாவது வகை. இந்த இரண்டு வகையிலும் நம்பிக்கை தான் இருக்கிறதே தவிர, உண்மை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் மூன்றாவது மனிதனைத்தான் நேசிக்கிறேன். மனிதனாகப் பிறந்தேன், மனிதனோடு இருந்தேன், வாழ்கின்ற காலத்தில் என் சக மனிதனும், இந்தச் சமூகமும் ஒரு அங்குலமாவது உயர்ந்திட வேண்டும் என்பதற்காக உழைத்தேன். அதற்காக என்னுடைய கல்வியை, என்னுடைய அர்ப்பணிப்பை, என்னுடைய எல்லாவற்றையும் அர்ப்பணித்தேன். எனவே மனிதனாகப் பிறந்து கடவுளாக நான் விரும்பவில்லை, கடவுளாக இருந்தும் மனிதனாக இந்த மண்ணிற்கு தரை இறக்கம் செய்வதை நான் விரும்பவில்லை. மனிதனாகப் பிறந்து, மாமனிதனாக மறையவே நான் ஆசைப்படுகிறேன் என்று சொன்னால், அந்த மனிதனைத்தான்…நேசிக்கிறேன்.”

தாழ்த்தப்பட்ட வகுப்பிலோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பிலோ, வன்னியராக இருந்தாலும், முதலியாராக இருந்தாலும், நாடாராக இருந்தாலும், இவையெல்லாம் இறைச் சாலையில் எதுவாக இருந்தாலும், தான் வளர்ந்தால் போதும், இன்னும் சொல்லப்போனால் அரசு பெற்றிருக்கிற அந்த அரசு வாகனமாக இருந்தாலும், அது அரசுப் பதவியாக இருந்தாலும், அதையெல்லாம் ஒரு 100 பேர் கூடுகின்ற திருமண மண்டபத்திலோ, ஏன் யாராவது இறந்து போனால் கூடுகின்ற ஒரு 500 பேர் இருக்கின்ற இடத்திலோ, “நான் பெரிய பதவியில் இருக்கிறேன், நான் அவனைவிட உயர்ந்தவன்” என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்கின்ற சமூகப் பார்வை தான் இன்னும் இந்த உலகத்து மக்கள் மத்தியில் இருக்கிறது. அது எனக்கே கூட தெரியும், கிராமத்திலே பார்க்கலாம்.

ஆனால், நம்முடைய அண்ணன் துரைசாமி அவர்கள்…

…ஏற்றத்தாழ்வுகளை நீக்க உழைத்த இரண்டு தலைவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் அவர்களை தூக்கிப் பிடிப்பது தான் என் வாழ்நாளில் எனக்கு கிடைத்திருக்கின்ற பொது வாழ்க்கையின் அடையாளம் என்று சொல்லி அவர் அந்தப் பணியை இன்றைக்கு ஆற்றி இருக்கிறார்.

இன்னும் கூட எங்களுக்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. நான் எல்லாம் பெரியார், அம்பேத்கரை பேசினேன். ஒருவேளை இன்றைக்கு சொல்வார்கள்: இந்த பையன் அப்ப பேசும்போதே எம்.எல்.ஏ ஆகணும்னு தான் நினைச்சிருப்பான் போல இருக்கு. இவன் அம்பேத்கரையும் பெரியாரையும் பேசுனதுக்கு இப்பதான் தெரியுது மந்திரியாகணும்னு நினைச்சிருக்கான் போல இருக்கு அப்படின்னு கூட எங்க பேர்ல ஒரு குற்றச்சாட்டு வரும். அப்படி நினைக்கல. ஆனால், அந்த எண்ணம் கூட இல்லாமல், “எனக்கு எதுவும் வேண்டாம், இந்த சமூகம் விழிப்படைந்தால் போதும்” என்கின்ற எண்ணம் கொண்டவர்தான் நம்முடைய அண்ணன் துரைசாமி அவர்கள்.

இன்றைக்கு ஒரு நல்ல புத்தகத்தை எழுதியிருக்கிறார். நானே கூட என்னுடைய முகவுரையில் சொல்லியிருக்கிறேன். இன்றைக்கு பெரம்பலூரில், தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவில், ஆ. ராசா என்றோ, ஆங்கிலத்தில் ஏ. ராஜா என்றோ இந்தியாவின் எந்தப் பகுதியும் எனக்கு தெரிந்தவர்கள் இருப்பார்கள். அல்லது இந்தியா என்னை அறிந்திருக்கிறது, தமிழ்நாடு என்னை அறிந்திருக்கிறது. அது திராவிட முன்னேற்றக் கழகத்தால், கலைஞரால் நான் கொண்டிருக்கிற 6 முறை நாடாளுமன்ற உறுப்பினர், 3 முறை மத்திய ஒன்றியத்திலே அமைச்சர் என்ற அந்தப் பொறுப்பு காரணமாக என்னை நீங்கள் எல்லாரும் அறிந்திருப்பீர்கள், இந்த தமிழ்நாடு அறிந்திருக்கிறது, இந்தியா அறிந்திருக்கிறது. மோடி ஐயாவாக இருந்தாலும் யாராக இருந்தாலும், குறுக்கே வருகிறபோது நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் நின்று என்னை பார்த்து சிரித்தோ, “ராஜா” என்று கை குலுக்குகின்ற இந்த இடத்தை நான் பெற்றிருக்கிறேன் என்றால், இப்படி நான் பெறுவதற்கு கலைஞர் முதற்கொண்டு இன்றைக்கு இருக்கிற முத்துவல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மனிதர் வரை, ஒரு ஆயிரக்கணக்கான மனிதர்களை நான் சந்தித்து அவர்களால் நான் முன்னேறி இருப்பேன் என்று சொன்னால், அந்த ஆயிரம் பேரில், இல்லை இல்லை, அந்த 100 பேரில் அண்ணன் துரைசாமி அவர்களும் ஒருவர் என்பதை இந்த நேரத்தில் நான் நன்றியோடு நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

நாங்கள் சந்தித்துக் கொண்ட காலங்களில் படித்த புத்தகங்கள்… ஒரு முறை நான் சட்டக்கல்லூரி மாணவராக இருந்தபோது அவர் ஆத்தூருக்கு என்னை அழைத்தார். தமிழ்நாட்டில் இருக்கிற பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். பெரியாரியவாதிகள், அம்பேத்கர்வாதிகள் வந்திருந்தார்கள். அப்போது நான் ஒரு கவிதை வாசித்தேன். அந்த கவிதைக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு, அன்றைக்கே எனக்கு தமிழ்நாட்டில் ஒரு 100 பேர், 200 பேர் என்னிடத்தில் தொடர்பு கொண்டு “இந்த ஊருக்கு வாருங்கள், அந்த ஊருக்கு வாருங்கள்” என்றெல்லாம் அழைப்பார்கள். எனவே, ஒரு மிகப்பெரிய விலாசத்திற்கு வருகிறபோது, அந்த விலாசத்தை எழுதியவர்கள் சில பேர் என்றால், அந்த சிலரில் அவரும் இருக்கிறார் என்கின்ற அந்த நன்றி உணர்ச்சியோடு நான் இந்த புத்தகத்தை வெளியிடுகின்றேன்.

இந்த புத்தகத்தை நீங்கள் எல்லோரும் படிக்க வேண்டும். இன்றைக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு அம்பேத்கர் தேவைப்படுகிறார். தந்தை பெரியார் தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய கருத்துக்களை தமிழ்நாடு என்கின்ற எல்லையோடு நிறுத்திக் கொண்டார். தமிழ்நாடு என்கின்ற எல்லையோடு நிறுத்திக் கொண்ட காரணத்தினால் அவருடைய கொள்கையை ஆங்கிலப்படுத்தியோ அல்லது பல மொழிகளிலோ கொண்டு சேர்க்கின்ற அந்த பணியை இன்றைக்கு இருக்கின்ற ஆசிரியர் வீரமணியாக இருந்தாலும், அல்லது இன்னும் சொல்லப்போனால் அவரை காட்டிலும் மறைந்த ஆனைமுத்து அவர்களாக இருந்தாலும், அகில இந்திய அளவிலே இந்த கொள்கையை கொண்டு சேர்ப்பதற்கு மிகுந்த வேலை பார்த்தார்கள். ஆனால், மொழி காரணமாக பெரியார் அங்கு போய் சேருவதிலே இன்னமும் தடை இருக்கிறது. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், அம்பேத்கர் எழுதிய அத்தனை புத்தகங்களும் ஆங்கிலத்தில் இருந்த காரணத்தினால், இன்றைக்கு இந்தியா மட்டுமல்ல, அகில உலகமும் அவரை திரும்பிப் பார்த்து, “இந்தியாவிலே நிலவுகின்ற எல்லாவற்றிற்கும் காரணம், தீர்வு எங்கே இருக்கிறது என்றால், அம்பேத்கரிடத்தில் இருக்கிறது” என்று சொல்லுகின்ற அளவுக்கு நாடாளுமன்றத்திலே இன்றைக்கு அனைத்துக் கட்சி காரர்களும் பேசுகிறார்கள். உலகத்திலே இருக்கிற இல்லாத கொடுமை இந்த தேசத்திலே மட்டும்தான் உண்டு.

ஏற்றுத்தாழ்வு என்பது இருக்கக்கூடாதா? இருக்க வேண்டுமா என்றால், எந்த ஒரு சமுதாயத்திலேயும் ஒரே மாதிரி எல்லோரும் வாழ்ந்து விட முடியாது. எல்லோரும் வழக்கறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்று சொன்னால், வழக்காடுவதற்கு நாங்கள் இருக்கிறோம், ஆனால் வழக்கை யார் கொண்டு வந்து தருவார்கள்? எல்லோரும் ஒரே மாதிரியான வேலையை பார்க்க முடியாது. இந்த சமூகம், இந்த உலகம் அமைதியாக இயங்க வேண்டும் என்று சொன்னால், அமைதியாக இயங்குவதற்கு என்னென்ன தேவையோ, உற்பத்தி சாதனங்கள், உற்பத்தி பொருள்கள், உற்பத்தி மூலங்கள் இவற்றையெல்லாம் செய்து கொள்ளுவதற்கு வெவ்வேறு தொழிலைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். “என்னிடத்திலே எல்லாம் இருக்கிறது” என்பதற்காக நானே என்னுடைய வேட்டி சட்டையை தைத்துக் கொள்ள முடியாது. நானே எனது முடியை வெட்டிக் கொள்ள முடியாது.

“நான் சாப்பிட்ட ரெண்டு இட்லிக்காக யாரோ ஒருவர் வயலிலே வேலை செய்து, அந்த அரிசியை எனக்குக் கொடுத்து, உளுந்தை எனக்குக் கொடுத்து, அதற்குப் பிறகு யாரோ ஒரு அம்மையார் அதை இட்லி பானையில வைத்து, வேக வைத்து, இவ்வளவு பேருடைய உழைப்பிற்குப் பிறகுதான் அது என் தட்டுக்கு வந்து சேருகிறது.

அப்ப இந்த சமூகத்தில் உற்பத்தி செய்வது யார்? அந்த உற்பத்திக்குக் பிறகு பானை செய்வது யார்? இறந்து போனால் தூக்குவது யார்? இவையெல்லாம் பிரித்துக் கொள்வதற்கு நிச்சயமாகத் தொழில் தேவைப்படுகிறது.

இந்தத் தொழில் எல்லா நாட்டிலேயும் இருக்கிறது. இங்கிலாந்துக்கு போங்க, ஷூ மேக்கர் (shoe maker) இருப்பான். ஆனா, அவருக்குப் பேரு சக்கிலி கிடையாது. வேற எந்த நாட்டுக்கு வேணாலும் போங்க, நகை செய்றவங்க இருப்பாங்க. அவர்களுக்குப் பேரு ஆசாரி கிடையாது.

தொழிலைப் பிரித்துக் கொண்டால்தான் ஒரு சமூகம் அமைதியாக இயங்க முடியும், சந்தேகமே இல்லை. உழவு செய்வதற்கு நாலு பேர், தச்சருக்கு நாலு பேர், நம்முடைய முடி திருத்துவதற்கு நாலு பேர், நானே முடியைத் திருத்திக்கொள்ள முடியாது. ஆக, இந்தச் சமூகத்தில் நாம் எல்லோரும் சுபிட்சமாக, அமைதியாக வாழ வேண்டும் என்றால், தொழிலைப் பிரித்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதற்குப் பெயர்—டிவிஷன் ஆஃப் லேபர் (Division of Labour).

தொழிலைப் பிரித்துக் கொண்டால்தான் நம் வீட்டுக்கு எல்லாம் வந்து சேரும். ஒரே தொழிலை ஒருத்தரே பார்த்தா சமூகத்துல வாழ முடியாது.

இது எல்லா நாடுகளிலேயும் இருந்தது. இந்தியாவிலே எங்கே மாறுபட்டது என்பதை அம்பேத்கர் உலகத்திற்குச் சொன்னார். எல்லா தேசத்துக்கும் சொன்னார். இங்கிலாந்தினுடைய பாராளுமன்றத்திற்கே போய் சொன்னார். பாரிஸ்டர் பட்டம் பெறுகிற போது சொன்னார். உலகத் தலைவர்களெல்லாம் கூப்பிட்டு சொன்னார். உங்களிடத்திலே ‘டிவிஷன் ஆஃப் லேபர்’ இருக்கிறது.

இன்றைக்கு ஒருவர் செருப்பு தைக்கிற தொழிலாளியாக இருக்கிறார், நாளைக்கு அவருக்கு வசதி வந்து ஒரு நகைக்கடை வைத்துக்கொண்டால் நகைக்கடைக்குப் போய்விடுவார். செருப்பு தைக்கிறவரை நீ சக்கிலி, அருந்ததியர்… செருப்பு தைத்ததற்குப் பிறகு ஆசாரி என்று பட்டம் கொடுக்க முடியாது. ஏனென்றால், அங்கே ஜாதி இல்லை.

தொழில் இருக்கிறது, ஜாதி இல்லை. ஆனால், இங்கே தொழிலும் ஜாதியும் ஒன்றாகப் பின்னப்பட்டு இருக்கிறது. அப்படிப் பின்னியதுதான் இந்து மதம். அதற்கு காவலர் இருப்பதுதான் கடவுள். அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ‘டிவிஷன் ஆஃப் லேபர்’ என்பது வேறு, ஆனால் இந்தியாவில் பிராமணர்கள் நமக்கு புகுத்தியது ‘டிவிஷன் ஆஃப் லேபரர்’ (Division of Labourer).

தொழிலைப் பிரித்துக் கொள்ளுங்கள், தப்பில்லை. ஆனால், தொழிலாளரைப் பிரித்து, சாகுற வரை… பிறந்தால் இந்த ஜாதி, சாகுற வரை அந்த ஜாதி என்று அந்த நுட்பத்தை… ‘டிவிஷன் ஆஃப் லேபர்’ எல்லா தேசத்திலேயும் இருக்கிறது, ‘டிவிஷன் ஆஃப் லேபரர்’… தொழிலைப் பிரிப்பது எல்லா நாடுகளிலும் இயற்கை, அது தேவை. ஆனால், தொழிலாளர்களைப் பிரித்து ஜாதியைத் திணித்த கொடுமை இந்த மதத்திலே மட்டும்தான் இருக்கிறது. அந்த மதத்தில் நான் இருக்க மாட்டேன் என்கின்ற நுட்பத்தைச் சொல்லி, கடைசி வரை அதற்காக வாழ்ந்தவர்.

இன்னும் சொல்லப்போனால், இவ்வளவு படிக்கிற சமஸ்கிருதம் நம்ம படிக்க முடியல, ஆனால் அவருக்கு ஒரு ஆத்திரம், சமஸ்கிருதத்திலேயே பெரிய பட்டம் படிச்சார். சமஸ்கிருதத்தில் படித்து, வேதத்தில் என்ன இருக்கிறது, அதுல என்ன இருக்கு, இதுல எல்லாத்தையும் கண்டுபிடிச்சார். ஸ்மிருதினா என்ன, ஸ்ருதினா என்ன, எப்படியெல்லாம் இந்த மண்ணிலே பிராமணர்கள் ஜாதியைத் தோற்றுவித்தார்கள், எப்படியெல்லாம் ஒருத்தருக்குக் கீழ ஒருத்தரை வச்சாங்க…

இதுல ஒரு மிகப்பெரிய நுட்பத்தைச் சொன்னார். ‘கிரேடட் இனீகுவாலிட்டி’ (Graded Inequality)-ன்னு ஒரு வார்த்தை, கிரேடட் இனீகுவாலிட்டி. சமத்துவமின்மை என்பது வேறு, எல்லாரும் சமமாக இருக்க முடியாது. நான் வச்சிருக்க கார் அவர்ட்ட இல்ல, அவர் வச்சிருக்க கார் என்கிட்ட இல்ல, என்னோட அறிவு அவர்ட்ட இல்ல…

ஆனால், சமத்துவமின்மை என்பது இயற்கைதான், இருக்கத்தான் வேண்டும். ஆனால் ‘கிரேடட் இனீகுவாலிட்டி’… நீங்க ஆதி திராவிடர் சமூகத்தை எடுத்தீங்கன்னா—பறையர், பள்ளர், அருந்ததியர். இந்த மூணு பேரும் தாழ்த்தப்பட்ட ஜாதி. ஆனால், ஒரு அருந்ததியரைப் பார்த்து பறையரோ, பள்ளரோ ‘அவன் என்னை விடத் தாழ்ந்த ஜாதி’ (அப்படின்னு நினைக்கிறான்). அப்ப அவரைப் பார்க்கும்போது அவனுக்கு ஒரு கம்ஃபர்டபிலிட்டி (comfortability)—’அவனுக்கு மேல நான் இருக்கேன்’.

நான் கீழ இருக்கும்போது எனக்கு மேல ஒருத்தன்—முதலியார், அதுக்கு மேல ஒரு செட்டியார், அதுக்கு மேல ரெட்டியார்… இப்படி கிரேடட் இனீகுவாலிட்டி. எவ்வளவு கவனமாகப் பிரித்தார்கள் என்றால், ஜாதியை அடுக்கடுக்காக அடுக்கடுக்காக ஏணியாக ஏணி ஏணிப்படியாக வைத்தார்கள், இப்படி வைக்கல. பக்கவாட்டுல வச்சா உடைச்சிரலாம், ஆனால் ஒரு ஏணி ஒரு ஏணி மேல பண்ணாங்க.

அதைத்தான் பேரறிஞர் அம்பேத்கர் சொன்னார்: ‘இந்து மதம் என்பது படிக்கட்டுகளால் உருவாக்கப்பட்ட மெத்தை வீடு. படிக்கட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால், வீட்டைத்தான் உடைக்க வேண்டும்’ என்று சொன்னார். யாராச்சும் ஜாதியை ஒழிக்கணும்னு நினைச்சீங்கன்னா மதம் இருக்காது, அதனாலதான் கட்டிப்பிடிச்சுத் தொங்குறீங்கன்னார் அம்பேத்கர்.

இவ்வளவு நுட்பமாக கிரேடட் இனீகுவாலிட்டி, அப்புறம் அசென்டிங் ஆர்டர் ஆஃப் ரெவரன்ஸ் (Ascending order of reverence), டிசென்டிங் ஆர்டர் ஆஃப் கன்டெம்ப்ட் (Descending order of contempt). ஒரு ஜாதி மேல போகப் போக அதுக்கு மரியாதை கூடும், கீழ வர வர மரியாதை குறையும்.

ஒவ்வொரு கம்பார்ட்மென்ட்குள்ளயும் (compartment)… தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளேயே கம்பார்ட்மென்ட், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள்ளேயே கம்பார்ட்மென்ட், முதலியார்லயே மூணு வகை…”

ஒரு எலக்‌ஷனில் உடையர் சமூகத்தை சேர்ந்தவர நிறுத்தினார்கள்”…நல்லா இருக்கு. எந்த உடையாருக்கு ஓட்டு போடுறதுன்னு தெரியல. டக்குன்னு பிரிச்சாங்க. நான் நத்தமான் உடையாரு, அவரு மலைமான் உடையாருன்டார். ஏம்மா, ரெண்டு பேரும் உடையாரு, ஓட்டு போடுங்கன்னா, டக்குன்னு கிளப்புனாங்க பாரு. அப்ப சாதி எவ்வளவு நுட்பமாக இங்கே பின்னப்பட்டிருக்கிறது. இவ்வளவு நுட்பமாக பின்னப்பட்டிருக்கிற சாதியை ஒழிப்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. ஆனால், அதை ஒழிப்பதற்கு வழி சொல்லுகிறேன் என்று ‘Annihilation of Caste’ – சாதியை ஒழிப்பதற்கு வழி என்று எழுதியவர் டாக்டர் அம்பேத்கர்.

அந்த புத்தகத்தை முதன்முதலாக தமிழிலே கொண்டு வந்த பெருமை தந்தை பெரியாருக்குத்தான் சேரும். அவர்தான் முதன்முதல்ல கொண்டு வந்தார். இப்படி அந்த இருபெரும் தலைவர்கள் இயங்கியதையெல்லாம் இன்றைக்கு நம்முடைய அண்ணன் அவர்கள்… பேசினா பேசிக்கிட்டே போகலாம். அதனால், இந்த இந்தியாவிற்கு மட்டுமே இருக்கின்ற இந்த சாதியை, இந்தியாவில்… என்ன இன்னொன்னு சொன்னார் அம்பேத்கர்.

எல்லா வேற்றுமைகளுக்கும் கண்ணுக்கு புலப்படும். நீங்க வந்து, ஒரு வெள்ளைக்காரன் ஒரு கருப்பரை பார்த்து ‘கருப்பா இருக்கிறான், முடி அசிங்கமா இருக்குது, கோர முகமா இருக்கு. அதனால எனக்கு பிடிக்காது, என்னை தொடக்கூடாது’ – தப்புதான். ஆனால், பவுதீக ரீதியாக பார்த்தால் தெரியும் நீக்ரோவை. மங்கோலியர் யார்? நீக்ரோ யார்? வேற்றுமைகளுக்கெல்லாம் உருவம் இருக்கிறது, தெரியும்.

ஆனால், அதையே அம்பேத்கர் சொன்னார், ‘இந்த ஊர்ல அது தெரியாது, அந்த கொடுமை இங்க இருக்கு’ன்னார். ஒன்னும் இல்ல, இந்த அரங்கத்துல யாரு… இங்க உடையார்லாம் இருக்காங்க, செட்டியார் இருக்காங்க, முதலியார் இருக்காங்க, எல்லாரும் இருக்காங்க இல்ல? யாராச்சும் ஒரு புது ஆளை கூட்டிட்டு வந்து, பிரபாகரன் முகத்தை பார்த்து ‘இவர் ஆதிதிராவிடரா, உடையாரா?’ முன்னாடி கவிஞர் முத்தரசர் இருக்காரு, அவரு ‘ஆதிதிராவிடரா, உடையாரா?’ யாராச்சும் சொல்லிடுவாங்களா?

ஓடுற பஸ்ஸை, ஒரு பஸ்ஸை நிறுத்துங்க. பஸ்ஸை நிறுத்தி யாராச்சும் ஒரு ஆளை, நல்ல சாதி வெறி புடிச்ச ஆளை, நிக்க வச்சு ‘இந்த பஸ்ல அவங்க அவங்க இருக்காங்க, இறக்குவறேன், ஒவ்வொரு ஆளா என்ன சாதி இருக்குன்னு கண்டுபிடிச்சுட முடியுமா’? நீக்ரோவை கண்டுபிடிக்கலாம், மங்கோலியரை கண்டுபிடிக்கலாம்.

அம்பேத்கர் சொன்னார்: சாதி பௌதீகத்தனமாக இல்லை, “It is a notion in your mind.” அது சாதியில் புகுத்தப்பட்டிருக்கிறது. நீங்க பஸ்ஸுக்கு போங்களேன் அந்த காலத்துல எல்லாம், பக்கத்து சீட்டுக்காரன் கேப்பான், ‘எந்த ஊரும்மா? தம்பி எந்த ஊருங்க நீங்க’? ‘நான் பெரம்பலூர்.’ ‘பெரம்பலூர்ல அமைச்சர் ராஜாவை தெரியுங்களா?’ ‘இல்லைங்க, எனக்கு தெரியாதுங்க, எனக்கு பழக்கம் இல்லைங்க.’ ரைட், எஸ்.சி இல்ல. அடுத்து கேட்பான், ‘ஜெகதீசன் ஒரு மாவட்ட செயலாளர் இருக்காருல்ல, அவரை தெரியுங்களா?’ ‘இல்லைங்க, அவருக்கும் நமக்கும் பழக்கம் இல்லை.’ கிடையாது, உடையார் அவுட்.

இப்படியே அவுங்க கண்டுபிடிச்சு, கண்டுபிடிச்சு, கண்டுபிடிச்சு போய், கடைசியில சாதியை தெரிஞ்சுக்க முடியாம, படாத பாடு படுவான். ஏன்னா, சாதி யாருக்கும் தெரியாது. அதனாலதான் அம்பேத்கர் சொன்னார்: “It is in your mind, it is a notion.” அது உன் மூளையில் செலுத்தப்பட்டிருக்கிற ஒன்று.

அந்த சாதி கண்ணுக்கு தெரியாது, அது செயற்கையாகத்தான் இருக்கு, அது புகுத்தப்பட்டது. ஆனால், மத்ததெல்லாம் பார்த்தா கண்ணுக்கு தெரியும். இப்படி கண்ணுக்கு தெரியாத, புலனுக்கு புலப்படாத ஒரு சாதி என்கின்ற ஒரு எண்ணத்தை தோற்றுவித்து, அந்த சாதி சாகுற வரை ஒருவன் இன்னொருத்தனோட சேராம, இவ்வளவு கொடுமையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறதே, இதற்கு காரணம் பிராமணியம்; இதற்கு காரணம் இந்து மதத்தில் இருக்கிற தத்துவங்கள்; இதற்கு காரணம் ஸ்மிருதி, ஸ்மிருதி, நான்கு வேதங்கள். இவற்றை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது.

இதற்காக முன்வாருங்கள் என்று அவர் குரல் கொடுத்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னைக்கும் உதயநிதி சனாதனம்ன்னா, உடனே கிளம்பிறாங்க. கிளம்புங்க…”

“இந்த அருமையான பணியை ஓய்விற்குப் பிறகும் செய்திருக்கிறார் என்றால், பொதுவாகவே இந்த வார்த்தையே தப்பு, பணி நிறைவுன்னு சொல்லணும். ஓய்வு பெறுகிறோம்னா எப்படி ஓய்வு பெற முடியும்? அவர் ஓய்வு பெற்றிருந்தால் புத்தகம் வந்திருக்குமா?

அதான் ஒரு தடவை சொல்லுவாங்க கதை. ராத்திரி 12 மணிக்கு வெள்ளைக்காரன் ஆலோசனை சொல்றதுக்காக காந்தியை கூப்பிட்டாங்களாம். உண்மையா பொய்யான்னு தெரியாது, அப்பலாம் நிலவின கதை. காந்தியை கூப்பிட்டாங்க, காந்தி தூங்கிட்டாருன்னு சொன்னாங்க. நேருவை கூப்பிட்டாங்க, நேருவும் தூங்கிட்டாருன்னாங்க. சரி அம்பேத்கரையாவது கூப்பிடுங்க ராத்திரி 12 மணிக்குன்னாங்க. உடனே அவரு வந்தாரு. ‘என்னய்யா நேருவை கூப்பிட்டும் வரல, காந்தியை கூப்பிட்டும் வரல, அம்பேத்கர் கூப்பிட்டு வந்துட்டீங்க?’ன்னாங்க. ‘அவங்க ரெண்டு பேரும் இருக்கிற சமூகம் எல்லாவற்றையும் பெற்று விழித்துக்கொண்ட சமூகம், அவர்கள் தூங்குகிறார்கள். என்னுடைய சமூகம் இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கிறது, அதனால்…’ [கைதட்டல்]

அப்ப அவர் நினைச்சா, இரண்டு பிள்ளைகளும் வேலையில இருக்கா, பேத்திக எல்லாம் வேலையில இருக்கா, அழகா ரெண்டு பேரும் டூர் போலாம்ல, போலாம்ல? ஏன் இந்த புத்தகத்தை எழுதணும்? இந்த சமூகத்தைப் பற்றிய அக்கறை. இந்த சமூகம் ஒரு அங்குலமாவது தன்னுடைய வாழ்நாளில் மாறிவிடாதா என்கிற அந்த ஏக்கம். அந்த ஏக்கத்திற்காக வாழுகின்ற வாழ்க்கைதான் இந்த சமூக வாழ்க்கையில் செம்மையான வாழ்க்கை.

எனவே, அம்பேத்கர் வாழ்க என்று சொல்வதோ அல்லது அம்பேத்கர் பெயரால் நாம் செய்கின்ற எல்லா பணிகளுக்கும் புகழ் தேடுவதோ பெருமையல்ல. அம்பேத்கர் என்ன சொன்னாரோ, அதைச் செய்து காட்டுகின்ற பணியை எல்லோரும் செய்வதற்கு முன்வாருங்கள். அதற்காக இந்த நூலினை அர்ப்பணித்த அவரை வணங்கிப் பாராட்டி, அண்ணியார் அவர்களை வணங்கிப் பாராட்டி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். நன்றி, வணக்கம்.” [கைதட்டல்]

நூலாசிரியர் துரைசாமி ஏற்புரை நிகழ்த்தினர். முன்னதாக பாலமுருகன் வரவேற்றார். நூலைப் பெற்றுக் கொண்டு தி.க மாவட்ட காப்பாளர் ஆறுமுகம், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், திமுக மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ் குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜ்குமார். பிரபாகரன் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் துரைசாமி மனைவி மணிமேகலை மற்றும் மகன் மகள்கள், குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!