சோழிங்கநல்லூர் தொகுதி கந்தன்சாவடியில் கட்டுமானப்பணி விபத்தில் சிக்கி, காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வரும் நபர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பெருங்குடி கந்தன்சாவடி, கோவிந்தசாமி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு, ஜெனரேட்டர் வைப்பதற்கான அறை கட்டுமானப்பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, திடீரென அக்கட்டுமானப் பணிகள் இடிந்து விழுந்தது. அதில் இடுபாடுகளில் சிக்கிய கட்டுமானத் தொழிலாளர்கள் 33 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 32 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேர் வெளிநோயாளியாகவும், 16 பேர் கந்தன்சாவடி அப்போலோ மருத்துவமனையிலும், 11 பேர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விபத்து நடைபெற்ற இடத்தினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் முதலாவதாக கந்தன்சாவடி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பேரையும், அடுத்து சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 பேரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.அங்கு பணியாற்றும் மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் வரும் நபர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி, யாரும் பயப்பட தேவையில்லை. அனைவருக்கும் விரைவில் குணமடைய தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என கூறினார்.அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நபர்களின் மருத்துவ செலவு முழுவதும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு நிதிலியிருந்து வழங்கப்படும். விபத்தில் சிக்கி உயிரிழந்த நபரின் குடுத்தாருக்கும், காயமடைந்த நபர்களுக்கும் உரிய நிவாரண நிதி முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். விபத்து குறித்து ஆய்வு செய்து, கட்டுமான பணியில் விதிமீறல்கள் இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது பணியின் போது மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும். கட்டுமானப் பணியினை மேற்கொள்ளும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் காண்ராக்டர்களும் அப்பணியாளர்களின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.