பெரம்பலூர்: டிச. 15 ஆம் தேதி நாடுமுழுவதும் உள்ளள சர்க்கரை ஆலைகளை முற்றுகையிடுவதென, கரும்பு விவசாயிகள் சங்க பேரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பெரம்பலூர், துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அன்பழகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் டி. ரவீந்திரன் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகம் 2014- 15 ஆம் ஆண்டுக்கான அரவைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 5 கோடியை, 15 சத வட்டியுடன் வழங்க வேண்டும். 2015- 2016 ஆண் ஆண்டு பருவ கரும்புக்கு மாநில அரசு இதுவரை பரிந்துரை விலை அறிவிக்காத நிலையில், ஒரு டன் கரும்புக்கு ரூ. 4 ஆயிரம் என அறிவிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும், மாநில அரசு கடந்த 2 ஆண்டுகளாக அறிவித்த கரும்பு பரிந்துரை விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்காததால் ரூ. 600 கோடி பாக்கி உள்ளது. இத்தொகையை, 15 சதவீத வட்டியுடன் 3.5 லட்சம் விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும். கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் ஆலைக்குள் வந்தவுடன், எடைபோட்டு நிறுத்த வேண்டும்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி, உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டி. 15 ஆம் தேதி நாடு முழுவதிலும் உள்ள சர்க்கரை ஆலைகளில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. கலையரசி, வட்ட செயலர்ள் எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.