பெரம்பலூர் மாவட்டத்தில், குரூப் 1, 2 மற்றும் 4 பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பணிக்கு தேர்வாகி பணியில் உள்ளனர். இது தவிர தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2 பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குரூப்-2 பணிக்கான பொதுத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, இந்த பயிற்சிவகுப்பில் கலந்து கொள்பவர்களை தேர்வு செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தால் தகுதித் தேர்வும் நடத்தப்பட்டது. இதில் 348 நபர்கள் தேர்வு எழுதி அதிலிருந்து 66 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை துவங்கப்பட்டது. பெரம்பலுhர; மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் ஆய்வுக்காக வருகை தந்திருந்த வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநர் சி.சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது சென்று குரூப் 2 இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பான முறையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி பலருக்கு அரசு வேலைகிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது. மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நடவடிக்கையாக அவரது நேரடி கண்காணிப்பில் இந்த வகுப்புகள் நடத்தப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பு இது.
நீங்கள் அனைவரும் அன்றாடம் பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும். தனக்கு தெரிந்ததை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்த செய்தி அனைவரின் மனதிலும் பதியும், மேலும் அனைவரும் எல்லா செய்திகளையும் தெரிந்துகொள்ள முடியும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியுமே வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே, இந்த வாய்ப்பை அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள 348 பேர் தகுதித்தேர்வு எழுதினார்கள். அவர்களில் நீங்கள் வெற்றிபெற்று இங்கு வந்துள்ளீர்கள். ஆனால் உங்களுக்கான போட்டியாளர்கள் இன்னும் நிறையபேர் உள்ளார்கள். 348 பேரில் மற்றவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. எனவே, நீங்கள் இதை முறையாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.
உங்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் 12.30 வரையிலும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். தகுதிவாய்ந்த நபர்களால் உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வாரந்தோறும் குரூப் 2 தேர்வில் கேட்கப்படுவது போலவே வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு போட்டித்தேர்வுகள் நடத்தப்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என இவ்வாறு பேசினார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளராகவும் உள்ள சி.சமயமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது முன்னிலையில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.