மத்திய தரை வழி போக்குவரத்து செயலர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, 8 நாட்களாக, நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இதனால், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு, வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன், மத்திய தரை வழி போக்குவரத்து செயலர் அபய் டாம்லே((Abey Damle)) பேச்சுவார்த்தை நடத்தினார்.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சுங்க கட்டண வசூல் முறை, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் நிர்ணயம் உள்ளிட்டவை மாற்றியமைக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்தது. இதையடுத்து, 8 நாட்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.