பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு பருவமழையால் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகள் போர்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு வருகின்றது – மேற்பார்வை பொறியாளர் தகவல்.
இது குறித்து பொறியாளர் தெரிவித்துள்ளதாவது:
தற்போது வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மதிப்பிட்டு சீர் செய்யும் பொருட்டு பெரம்பலூர் மின்பகிர்மான வட்டத்தின் பெரம்பலூர் மற்றும் அரியலூர் கோட்டங்களில் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவிமின் பொறியாளர் தலைமையில் தலா 10 பணியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினரால் இன்று பெரம்பலூர் நகரில் ஆலம்பாடி ரோட்டில் முத்துரத்தினா கேஸ் கிடங்கு அருகே சாய்ந்த நிலையில் இருந்த உயரழுத்த மின் கம்பம் சரிசெய்யப்பட்டது. அதே போல் அரியலூர் கோட்டத்தில் அரியலூர் நகரில் செந்துறை ரோட்டில் லட்சுமி தியேட்டர் அருகே சாய்ந்த நிலையில் இருந்த தாழ்வழுத்த மின் கம்பம் சரிசெய்யப்பட்டது.
எனவே பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் எந்த பகுதியிலாவது மின் கம்பங்களின் மீது மரங்கள் விழுந்து எங்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் அல்லது உதவி செயற்பொறியாளரையே, அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவையற்ற உயிரிழப்புகளை தவிர்க்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.