சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பாக சட்ட கல்வியறிவு கழகம் துவக்கவிழா மற்றும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி சட்டம் தொடர்பான நூல்கள் மற்றும் கணினிகள் வழ்ழங்கும் விழா சென்னை நூங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும் நீதிபதியுமான ஐ.ஜெயந்தி மாணவிகளிடம் சட்ட நூல்கள் வழங்கி அவர்களுக்கு விளக்கம் அளித்தார். சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய நூல்கள் மற்றும் கணினி வழங்கிய நீதிபதி, இந்த நூல்களை படித்து மாணவிகள் சட்டம் குறித்து அனைத்து விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஜெயந்தி, சமூகத்தில் விழிம்பு நிலையில் உள்ள ஏழைகளுக்கு உதவும் விதமாக தங்களது சட்டபணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருவதாகவும் , தாம் பள்ளிகள் தோறும் சென்று மாணவிகளிடையே சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் கூறினார். இதுவரை சென்னையில் 5 பள்ளிகளில் சட்ட நூல்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த நீதிபதி ஜெயந்தி, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களிலும் இந்த பணி தொய்வின்றி தொடர்ந்து வருவதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை , ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.