பெரம்பலூர் ; பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம், தழுதாழை கிராம நிர்வாக அலுவலகம் அருகே மழைமானி அலுவலகம் ( மழையின் அளவை அளக்கும் கருவி ) இயங்கி வருகிறது.
இங்கு பதிவாகும் மழையின் அளவை தழுதாழை கிராம உதவியாளர் காலை மற்றும் மாலை நேரங்களில் பார்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து வந்தார்.
இந்த அலுவலகத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் உள்ளே சென்று மழையை அளக்க உதவும் குடுவையை திருடி சென்று விட்டனர். வழக்கம் போல் இன்று காலை மழை அளவை குறிப்பதற்காக கிராம உதவியாளர் ஈஸ்வரன் சென்றுள்ளார்.
அப்போது மழை அளவை அளக்கக்கூடிய குடுவை திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து கிராம நிர்வாக அதிகாரி கலையரசிக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குடுவையை திருடியவர்களை தேடி வருகின்றனர். இதனால் தற்போது அந்த பகுதியில் பெய்யும் மழையின் அளவை தெரிவிக்க முடியவில்லை. அதனால், புதிதாக மழைமானி வாங்கி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.