பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், சுப்பிரமணியசாமிக்கு ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
கந்தசஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தினமும் முருகனை வழிபட்டனர். நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. அப்போது தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரனை வதம் செய்யும் காட்சியும், அதன் பின்னர் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சூரசம்ஹார விழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
விழாவின் தொடர் நிகழ்ச்சியாக இன்று காலை பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமியின் திருக்கல்யாணம் நடைபெற்றது. முருகப்பெருமான் மணக்கோலத்தில் தெய்வானை, வள்ளிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி வேதவிற்பன்னர்களால் நடத்தப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு மொய் பணம் எழுதினார்கள்.
அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் தம்பதி சமேதராக முருகப்பெருமான் திருவீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முருகப்பெருமானின் திருக்கல்யாண திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.