பெரம்பலூர்: தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையினால் பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழைபெய்து வருகின்றது. பெரும்பாலான ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழைகாரணமாக அனைத்துப்பகுதிகளிலும் தகுந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரும்பாவூர் பெரிய ஏரி, தொண்டமாந்துறை ஏரி, கல்லாறு மற்றும் வெங்கலம் பெரிய ஏரி உள்ளிட்ட நீர்வரத்துப்பகுதிகளையும், மற்ற பகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று (நவ.15) நேரில் பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தேவையான அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து ஊராட்சிகளுக்கும் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவர்கள் அங்கேயே தங்கி அவ்வப்பொழுது மழையின் விளைவுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், மழையால் வீடுகள் பாதிக்கப்படும் நேரங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள பள்ளிகளின் சாவிகள் சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு பள்ளிகளில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் சேதம், வளர்த்த ஆடு,மாடுகள் சேதம் ஏற்படும் நபர்களுக்கு உடனுக்குடன் தமிழக அரசின் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் உள்ளன. இவற்றில் வடக்கலூர் ஏரி, வெண்பாவூர் ஏரி மற்றும் அரும்பாவூர் ஏரி ஆகியன 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமுள்ள லாடபுரம் பெரிய ஏரி, குரும்பலூர் ஏரி ஆகியன 75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
வெங்கலம் சிறிய ஏரி, பாண்டகபாடி ஏரி, ஆய்குடி ஏரி, பெரம்பலூர் சிறிய ஏரி ஆகியன 50 சதவீதத்திற்கு மேல் கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்மழையால் நீர்வரத்துப்பகுதிகளில் உடைப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி உடைப்புகள் ஏற்பட்டால் அவற்றை உடனே எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நீர்வரத்துப்பகுதிகளில் தேவையான அளவு மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிங்களிலும் ஜெனரேட்டர் மற்றும் ஜேசிபி எந்திரம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே ஒருசில பகுதிகளில் சேதமாகும் வீடுகளுக்கு சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம் உடனுக்குடன் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கூரை வீடுகள் பகுதி சேதத்திற்கு ரூ.4,100ம் முழுவதுமாக சேதமடைந்தால் ரூ.5,000 ம், பிற வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தால் ரூ.5,200ம் முழுவதுமாக சேதமடைந்தால் ரூ.95,100ம் நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது.
மேலும் ஆடுகள் இறந்தால் ரூ.3000ம், மாடுகள் இறந்தால் தலா ரூ.30,ஆயிரம் இழப்பீட்டு நிவாராணத் தொகையாக வழங்கப்பட்டு வருகின்றது. மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்க சுகாதாரத்துறை மூலம் அனைத்துப்பகுதிகளிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பல்வேறு பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் மழையால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் 1077 என்ற கட்டமில்லா தொலைபேசியில் புகார்களை பதிவு செய்யலாம். தொடர்மழையின் காரணமாக நாளை (16.11.2015) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
காலை 10 மணிக்கு முன்பு புறப்பட்ட மாவட்ட ஆட்சியர் மதிய உணவு சாப்பிடாமலேயே மழைக்கால முன்னேற்பாடு பணிகளையும், ஏரிகளுக்கு நீர் வரத்து அளவையும் பார்வையிட்ட ஆட்சியர் மாலை 6 மணி அளவிலேயே மதிய உணவு சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது