சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110-ன் விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை அறித்தார். அதன்படி, வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் விளைவாக அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகைகளில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சீரமைக்கும் பொருட்டு மாநில நிதியிலிருந்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும், வெள்ளநீர் தங்கு தடையின்றி வெளியேற்றப்படும் வகையில், இணைப்பு கால்வாய்கள் அமைத்தல், மூடிய கால்வாய்களை புனரமைத்தல், பாசனமில்லாத ஏரிகளை ஆழப்படுத்தி நீர்த் தேக்கங்களாக மாற்றுதல், உபரி நீர் கால்வாய்கள் மற்றும் சாலையோர கால்வாய்களை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைத் துறைக்கு ஆற்றிய சேவையை போற்றிடும் வகையில், அவரது பிறந்த தினமான அக்டோபர் 1-ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார். மேலும், சமூக நீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மறைந்த ராமசாமி படையாச்சியாரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த தினமான செப்டம்பர் 16-ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!