தலைக்கவசத்தை கட்டாயமாக்கிய அரசு, காவல்துறை பணம் வாங்குவதையும் கட்டாயமாக தடை செய்தல் வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழ்நாடு) இராஜ்குமார் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் ஜூலை 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிதிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைக்கவசம் அணியத் தவறியவர்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆவணங்களை காவல் துறை பறிமுதல் செய்வதற்கு உரிமையும் அளித்துள்ளது தமிழக அரசு.

வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அவருடன் பின்னால் அமர்ந்து வருபவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது தமிழக அரசு. மேலும் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஆவணங்களை எல்லா நேரத்திலும் வைத்திருக்க வேண்டும் என்றும் அசல் ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

பெரும்பாலும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் தான் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வரும் நிலையில் உடனடியாக எல்லோரும் தலைக்கவசம் அணியும் வாய்ப்பும் குறைவாகவே உள்ளது. பல நேரங்களில் பெண்களும் குழந்தைகளும் தலைக்கவசம் அணியாமல் பயணிக்க வாய்ப்பும் உள்ளது. வீட்டிற்கு குறைந்தது 2 முதல் 4 தலைக்கவசங்கள் தேவைப்படும் நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. அரசு இப்போது கட்டாய தலைக்கவச ஆணையை நிறைவேற்றினாலும், பொதுமக்கள் அனைவரும் பல காரணங்களுக்காக தலைகவசம் அணியாமல் பயணிக்க வாய்ப்பு உள்ளது.

இப்படியான வாய்ப்பை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் காவல்துறை வழக்கம் போல தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் பெறுவார்கள் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது. ஏற்கனவே பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள் பணம் பெரும் காணொளி காட்சிகள் இணையத்தில் அதிகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக தமிழக காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்து தான் அதிக அளவில் பணத்தை பெறுகிறார்கள். வாகன சோதனை என்ற பெயரில் இரு சக்கர வாகன ஓட்டிகள் காவல்துறையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் வரும் 1 ஆம் தேதி முதல் கட்டாய தலைக்கவச உத்தரவின் அடிப்படையில் பல இரு சக்கர வாகன ஓட்டிகள் காவல்துறையால் மடக்கிப் பிடிக்கப்படுவர், அவ்வாறு பிடிபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து காவல்துறையினர் அதிக அளவில் இலஞ்சம் பெறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது.

இதை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். சாலைகளில் பணியில் உள்ள காவல்துறையினரிடம் நூறு ரூபாய்க்கு (செலவுக்காக அவர்களின் சொந்த பணம்) மேல் எந்த நேரத்திலும் பணம் இருக்கக் கூடாது. மேலும் அபராதம் என்ற பெயரிலும் பணத்தை நேரடியாக காவல்துறை பெறுதல் கூடாது. அபராதத்திற்கான தொகையை கட்ட கால அவகாசம் கொடுத்து அதை நீதிமன்றத்தில் மட்டுமே கட்டும்படி காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்த வேண்டும்.

இதன் மூலமாக காவல்துறை எந்த சூழ்நிலையிலும் பொது மக்களிடம் அதிகாரப் பூர்வமாகவும் அதிகாரமற்ற முறையிலும் பணம் வாங்குதல் முடியாது. காவல்துறை மக்களிடம் இலஞ்சம் பெறுவதை இந்த நடவடிக்கை மூலமாக முழுமையாக தடுக்கலாம். பணியில் இருக்கும் காவல்துறையினரை கண்காணிக்கவும் அவர்களிடம் சோதனை நடத்தவும் ஒரு தனிக் குழுவையும் அரசு நியமிக்க வேண்டும். பொதுமக்களும் காவல்துறையினர் பணம் பெறுவதை படம் எடுத்து அரசுக்கு அனுப்பும் பட்சத்தில் பணம் பெற்ற காவல்துறை ஊழியரை அரசு உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட இந்த பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து பொதுமக்களுக்கு நன்மை செய்யுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!