தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை ஊழியர்கள் இன்று ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய பென்சன் மசோதாவை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலையில்லா பட்டாதரிகளை பணியில் அமர்த்த வேண்டும். கிராமங்களில் மேம்படுத்தப்பட்ட பணிகளை கண்காணிக்க தனி அலுவலர் நியமிக்க வேண்டும். சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வருவாய் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வருவாய் துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஒராண்டுக்கு மேலாகியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட வருவாய்துறை ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 4 தாலூகா அலுவலகங்கள், 1 கோட்டாட்சியர் அலுவலகம் , ஆட்சியர் அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.