பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தில் சைல்டு லைன் மூலம் 40 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் என இந்தோ அறக்கட்டளை இயக்குனர் முகமதுஉசேன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பாண்டிச்சேரி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளடங்கிய சைல்டு லைன் தேசிய அவசர ஃபோன் சேவை சென்னையிலிருந்து செயல்படுகிறது.
இந்த தேசிய அவசர ஃபோன் சேவையை 1098 என்ற டோல்ஃபிரி நம்பரில் தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தில் வேலுார், ஈரோடு, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களை தவிர 29 மாவட்டங்களில் இச்சேவை டாடா கன்சல்டன்ஸி என்ற தனியார் நிறுவனம் மூலம் செயல்படுகிறது.
0 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக செயல்படும் இச்சேவையை யார் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவரின் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
இதுவரை பெரம்பலுார் மாவட்டத்தில் குழந்தை திருமணத்திலிருந்து 20 குழந்தைகளையும், குழந்தை தொழிலாளராக பணியாற்றி ஒரு குழந்தையும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் துன்புறுத்தலுக்குள்ளான நான்கு குழந்தைகளும், கொத்தடியையாக இருந்த ஒரு குழந்தையும், இடைநின்ற நான்கு குழந்தையும் மீட்டு அவர்களுக்கு புணர்வாழ்வு ஏற்படுத்தி உள்ளோம்.
சைல்டு லைன் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நவ., 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு ராக்கி கட்ட திட்டமிட்டுள்ளோம். கையழுத்து இயக்கம், பேரணி, போட்டிகள், கருத்தரங்கம் ஆகியவை மூலம் ஒரு வார காலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.