Perambalur: “When the BJP asked him to bow down, Palaniswami went so far as to lie flat on the ground!” — Chief Minister M.K. Stalin speaks at an election campaign rally.

பா.ஜ.க. குனியச் சொன்னால், படுத்தே விட்டார் பழனிசாமி; இப்படிப்பட்ட அடிமைகளின் துணையோடு தமிழ்நாட்டிற்குள் நுழைய நினைப்பவர்களை எல்லையிலேயே நாம் தடுத்து நிறுத்த வேண்டும்!
பா.ஜ.க.விடம் தமிழ்நாடு சிக்கினால், ஜம்மு காஷ்மீரை உடைத்தது போன்று தமிழ்நாட்டையும் மூன்று யூனியன் பிரதேசமாகத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவார்கள்!
பெரம்பலூர் அருகே அசூர் -ஒதியம் பிரிவு சாலை அருகே நடந்த சட்ட மன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திமுகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல், ஆட்சி அதிகாரம் இவை அனைத்துமே நமக்கு இரண்டாம் பட்சம்தான்! தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றுதான் ஆட்சிக்கே வந்தோம்! இப்போது, தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்றால், தி.மு.க. பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா! உயிரே போனாலும் தி.மு.க. இந்த அநியாயத்தை தடுக்கும்! வடக்கோடு போர் செய்வது தமிழ்நாட்டிற்கு என்ன புதிதா? நன்றாகவே பழக்கப்பட்டதுதானே? தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், தமிழினத் தலைவர் கலைஞரும் ஏற்கனவே செய்த போர் இது! அப்போது அவர்களுடைய தளபதியாக அந்தப் போரில் பங்கெடுத்த இந்த ஸ்டாலின், இன்றைக்கு நானே தலைமை தாங்கிப் போரை நடத்தும் கடமையைக் காலமும் தமிழ்நாட்டு மக்களும் எனக்கு வழங்கியிருக்கிறார்கள். திராவிடப் பெருந்தலைவர்கள் சுழற்றிய வாள் இன்றைக்கு என் கைக்கு வந்திருக்கிறது. போருக்கு நான் தயார்! நீங்கள் தயாரா? சண்டை செய்ய நான் ரெடி! நீங்கள் ரெடியா? தமிழ்நாடு மொத்தமும் சுற்றி வந்து கேட்டுவிட்டேன், அனைவரும் ரெடி! பெரும் போருக்கு பெரம்பலூர் ரெடியா? வடக்கே கங்கை வரை சென்று வெற்றி கொண்ட ராஜேந்திர சோழனின் அரியலூர் ரெடியா? நன்றி!
இப்போது நம்முடைய வெற்றி வேட்பாளர்களை உங்களுடைய அனுமதியோடு அறிமுகப்படுத்தப் போகிறேன்.
“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர் மானங் காப்போர்
சரித்திரந்தனிலே நிற்கின்றார்!
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா!
தாயகம் காப்பது கடமையடா!”
அப்படித் தாயகம் காக்கும் கடமை இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவர் மேலேயும் விழுந்திருக்கிறது!
முதலில், குன்னம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள். ‘அரியலூர் அரிமா’ என என்னால் பாராட்டப்பட்டவர். அமைச்சர், எழுத்தாளர், சிந்தனையாளர், பேச்சாளர், களப்போராளி. மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி, 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பை வழங்கியும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.
அடுத்து, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி அவர்கள். மருத்துவராக இருந்தாலும் மக்கள் பணியாற்ற வந்திருக்கிறார். இவருடைய அம்மா சரோஜினி அவர்கள், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக இருந்தவர். ஜெயலட்சுமி பெரம்பலூர் மாவட்ட மருத்துவர் அணித் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.
அடுத்து, அரியலூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் லதா பாலு அவர்கள். திருமானூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக இருந்து, சிறப்பாக மக்கள் பணியாற்றியவர். அரியலூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக மூன்று முறை இருந்திருக்கிறார். இப்போது மாவட்டக் கழகத் துணைச் செயலாளராக இருக்கிறார்.
அடுத்து, ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் க.சொ.க. கண்ணன் அவர்கள். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, நல்ல பல திட்டங்களை இந்தத் தொகுதிக்குக் கொண்டு வந்தவர். கடந்த 5 ஆண்டுகளில் இந்தத் தொகுதிக்கு மட்டுமே 2 ஆயிரத்து 107 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளைக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த நான்கு பேருக்கும் உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் எல்லாம் பெருவாரியான வாக்கினை வழங்கி, வெற்றி பெற வைக்க வேண்டும்! நான்கு பேருடைய வெற்றியும் உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி! வேட்பாளர்கள் இப்போது உட்காரலாம்! உங்கள் சீட் கன்ஃபார்ம் ஆகிவிட்டது!
இந்த அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் செய்து தந்திருக்கும் நலத்திட்டப் பணிகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். அரியலூரைப் பொறுத்தவரையில், ஜெயங்கொண்டத்தில், பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் காலணி தொழிற்சாலை, கங்கைகொண்ட சோழபுரத்தில் மாபெரும் அருங்காட்சியகம், மாமன்னர் இராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளை, அரசு விழாவாக அறிவித்து, கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குப் புதிய கட்டடம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை, மாவட்டத் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்வு, ஆண்டிமடத்திற்குப் புதிய தீயணைப்பு நிலையம், அரியலூரில் 8 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து நிலையம், மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை, அரியலூரில் புதிய நூலக கட்டடம்.
அதேபோன்று, பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் நகராட்சி மாநகராட்சியாகத் தரம் உயர்வு, பெரம்பலூர் மாவட்டம் – அரும்பாவூரில் கைவினைஞர்களின் நலனுக்காகப் பொது பயன்பாட்டு மையம்,
வேப்பூர் மற்றும் செந்துறை அரசு மருத்துவமனைகளில் புதிய கட்டடங்கள், கொளக்காநத்தம் பகுதியில் துணை மின் நிலையம், வேப்பூர் அரசு கல்லூரியில் விடுதி கட்டடம், குன்னத்தில் புதிய பேருந்து பணிமனை மற்றும் ஐ.டி.ஐ. கட்டடம், கொளக்காநத்தம் பகுதியில் புதிய அரசுக் கல்லூரி, ஆடுதுறை – ஆக்கனூர் உயர்மட்ட மேம்பாலம், செந்துறையில் துணை மின் நிலையம், பெரியவெண்மணியில் அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதிகள், 350 கோடி ரூபாயில் காவேரி மற்றும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம்,
எறையூரில் புதிய சிப்காட் பூங்கா, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குப் புதிய கட்டடங்கள், பாடாலூர் அருகே திருவிளக்குறிச்சியில் ஆவின் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை. இப்படிப்பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்கார அரசுதான், திராவிட மாடல் அரசு! இத்தனை சாதனைகளைச் செய்துவிட்டுத்தான் உங்களுடைய ஆதரவைக் கேட்க வந்திருக்கிறேன்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் ரீதியாக நான் விளக்கிவிட்டேன். இப்போது இல்லை, ஓராண்டிற்கும் மேலாக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். தெலங்கானா மாநில முதலமைச்சர் மாண்புமிகு ரேவந்த் அவர்கள் ஒரு பதிவு போட்டிருக்கிறார். “இந்தியாவில் நீங்கள்தான் இதனை முதன்முதலில் சொல்லி எச்சரித்தீர்கள், நீங்கள் சொன்னது போன்று இப்போது நடக்கிறது” என்று அவருடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
தொகுதி மறுவரையறை ஆபத்தை இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்று நிறையப் பேர் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். ஒரு கதை சொல்கிறேன், சொல்லலாமா?
நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறீர்கள். உங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம். உண்மையாக உழைக்கிறீர்கள். சொல்லும் அனைத்து வேலைகளையும் நீங்கள் சிறப்பாகச் செய்கிறீர்கள். உங்களால்தான் அந்தக் கம்பெனிக்கு லாபமே கிடைக்கிறது. இன்னொருவர் அதே கம்பெனியில் ஊழியராக இருக்கிறார். உங்களுக்குக் கொடுப்பதைவிட அந்த ஆளுக்கு இரண்டு மடங்காக 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், சொல்லும் எந்த வேலையையும் அந்த ஆள் சரியாகச் செய்ய மாட்டார். இப்போது அனைவருக்கும் சம்பளம் உயர்த்தப் போகும் நேரத்தில், வேலையே செய்யாத அந்த ஆளுக்கு 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம், சொன்ன அனைத்து வேலைகளையும் சரியாகச் செய்து கொண்டிருக்கும் இவருக்கு, 10 ஆயிரத்தில் இருந்து 12 ஆயிரமும் கொடுத்தால், அது நியாயமா? அநியாயமா? இதற்குப் பெயர் அயோக்கியத்தனமா? இல்லையா? நீங்களே சொல்லுங்கள். நமக்குத்தான் 2 ஆயிரம் கூடுதலாக வருகிறதே என்று யாராவது நினைப்போமா? மாட்டோம்! அங்கே வேலையே செய்யாதவனுக்கு மேலும் மேலும் வாரி வழங்கிவிட்டு, அவனுடைய சுமையையும் நம் மீது ஏற்றி வைத்தால் கேள்வி கேட்போமா, மாட்டோமா? நமக்கு புரமோஷன் கொடுக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை, இருப்பதைப் பறித்தால் என்ன செய்வது? இதுதான் தொகுதி மறுவரையறை! இதை எதிர்த்துதான் நாம் போராடுகிறோம்! ஒட்டுமொத்த தென் மாநிலங்களும் போராடுகின்றன! நம்முடைய உரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கிறோம். பிரதமரிடம் இது தொடர்பாக விளக்கத்தையும், வாக்குறுதியையும் கேட்கிறோம்.
ஆனால், இப்படிப்பட்ட நேரத்தில் நேற்று கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் அவர் நாகர்கோவில் வந்து சும்மா ஷோ காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். கிண்டலாகச் சொல்லவில்லை, உண்மையாகவே ரோடு-ஷோ மட்டும்தான் நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார். நாம் கேட்ட கேள்விக்கும் பதில் இல்லை. மோடி வரும்போது அவருக்குப் பூ தூவச் சென்றிருக்கிறார். யார் தெரியுமா? நம்முடைய பழனிசாமி. பிரதமர்கூட, “நம்மிடம் பழனிசாமி இதைப்பற்றி ஏதாவது கேட்பாரா? என்று அவர் யோசித்து இருப்பார். ஆனால், பழனிசாமி அவருடைய ஜி கூட ஜீப்பில் நின்று கொண்டு ஊர்வலம் சென்றதோடு சரி, ஒன்றும் பேசவில்லை.
பிரதமரைப் பார்த்துப் பழனிசாமி சிரித்த சிரிப்பிலேயே அவருக்குப் புரிந்திருக்கும், இந்த அடிமை குரல் கொடுக்க மாட்டார், இவரை வைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பிரதமர் மோடி நினைத்திருப்பார்.
அவர் நினைத்ததற்கும் மேலாகச் சிறந்த அடிமை என காட்டுவதுபோன்று இன்றைக்கு அவர் பேசியிருக்கிறார். தொகுதி மறுவரையறையை பா.ஜ.க. அரசு மிக அருமையாகச் செய்வார்களாம்! பழனிசாமி அவர்களே… எவ்வளவு பெரிய காமெடி இது… இந்தியாவில் இருக்கும் பல முதலமைச்சர்களும், பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த ஆபத்தை தெரியாமலா கண்டிக்கிறார்கள். பா.ஜ.க. பழனிசாமியை குனியச் சொன்னால், படுத்தே விட்டார் என்பது போன்று பேசியிருக்கிறார். அந்தச் சட்டத்தின் முன்வரைவே வெளிவந்துவிட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குப் பேராபத்து வரப் போகிறது என்று அதில் தெளிவாக இருக்கிறது.
இதனைக் கொண்டு வரும் முறையே பாசிசத் தனம் இது. தமிழ்நாட்டில் இருக்கும் பா.ஜ.க. தலைவர்கள்கூட இது என்ன, இதை எப்படி நியாயப்படுத்துவது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பழனிசாமி, அவர்களை எல்லாம் முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு முட்டு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட அடிமைகளின் துணையோடு தமிழ்நாட்டிற்குள் நுழைய நினைப்பவர்களை எல்லையிலேயே நாம் தடுத்து நிறுத்த வேண்டும்! பத்து தோல்வி பழனிசாமிக்குப் பதினோராவது தோல்வியையும் நாம் வழங்க வேண்டும்! அதுவும் இந்தத் பதினோராவது தோல்வி மறக்க முடியாத தோல்வியாக இருக்க வேண்டும்!
பொதுவாக, 18 வருடம் சபரிமலை செல்பவர்களை குருசாமி என்று ஆன்மீக அன்பர்கள் சொல்லுவார்கள். ஆனால், பழனிசாமி அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்தால், 18 முறை தொடர்ந்து தோற்று, தோல்வியில் குருசாமி பழனிசாமி என்று மாறிவிடுவார். தமிழ்நாட்டிற்கு முதற்கட்டத்தில் தேர்தல் வைக்காமல் கொஞ்சம் தள்ளி வைத்தால், தி.மு.க. வெற்றி பெறும் எண்ணிக்கையாவது குறையுமா என பா.ஜ.க. ஒரு கணக்கு போட்டார்கள். ஆனால், அதுவும் இப்போது தப்புக் கணக்காகப் போய்விட்டது.
ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வரும் கருத்துக்கணிப்புகளைப் பார்த்தாலே தெரிகிறது. முதலில் நமக்கு 180 என்று போட்டார்கள். இப்போது 190, 200 எனப் போட ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தலுக்குள் இருநூறைக் கிராஸ் செய்துவிடும். அதுவும் தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தைக்கூட எதிர்த்துப் பேசாத அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. ஏனென்றால், தமிழ்நாடு மக்கள் அந்த அளவுக்குக் கொதித்துப் போயிருக்கிறார்கள். இதற்குக் கூடப் பேசவில்லை என்றால் வேறு எதற்குத்தான் பழனிசாமி வாயைத் திறப்பார் என்று கேட்கிறார்கள்.
வளர்த்துவிட்ட செங்கோட்டையனுக்குத் துரோகம்; பதவி கொடுத்த அம்மையார் சசிகலா மற்றும் தினகரனுக்குத் துரோகம்; நம்முடைய சகோதரர் ஓ.பி.எஸ். அவர்களுக்குத் துரோகம்; அவைத்தலைவராக இவர்களுடைய ஆட்சியைப் காப்பாற்றிய தனபால் அவர்களுக்குத் துரோகம்; C.A.A. மற்றும் F.C.R.A. போன்ற சட்டங்களுக்கு முட்டு கொடுத்துச் சிறுபான்மையின மக்களுக்குத் துரோகம்; மூன்று வேளாண் சட்டங்களுக்கு முட்டுக் கொடுத்து விவசாயிகளுக்குத் துரோகம்; அம்மையார் ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த பா.ஜ.க. கூடக் கூட்டணி சேர்ந்து அவருக்கும் துரோகம்; இன்றைக்குத் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு தெரிவித்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம். இதுதான் எவல்யூஷன் ஆஃப் எடப்பாடி!
உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும் – நிர்வாகிகளும் இவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதற்கே தயாராக இல்லை. அ.தி.மு.க.வுக்கு நான்தான் தலைமை என இவர் அனைவரையும் கன்வின்ஸ் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. எம்.எல்.ஏ.க்களை ஏலம் எடுத்து முதலமைச்சர் ஆனவர் அல்லவா அவர்… கூவத்தூரில்…. பழனிசாமி முதலமைச்சராக இருந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டையே டெல்லி பா.ஜ.க.வின் வேட்டைக்காடாக ஏலம் விட்டார்! அந்தச் சீரழிவில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு, நாம் இன்றைக்கு சாதனைத் திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக ஆக்கியிருக்கிறோம்.
அதன் அடுத்த கட்டம்தான், தி.மு.க. தேர்தல் அறிக்கை! இது சாதாரண அறிக்கை இல்லை, இது சூப்பர்ஸ்டார் அறிக்கை! இப்போது நம்முடைய சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் அறிவிப்புகளைச் சொல்லவா? 2006-இல் கலர் டிவி கலைஞர் கொடுத்தார்; 2021-இல் மகளிர் உரிமைத்தொகை நாம் கொடுத்தோம். இப்போது, 2026-இல் இல்லத்தரசி திட்டம்! இந்த ஒரு அறிவிப்பிலேயே நம்முடைய எதிரிகள் எல்லாம் க்ளோஸ் ஆகிவிட்டார்கள். இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப் போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளைப் புதியதாகவும் வாங்கிக் கொள்ளலாம் அல்லது பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் பண்ணியும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில் உங்களுக்குப் பிடித்த கம்பெனியில் வாங்கிக் கொள்ளலாம்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்ஷன் ஸ்டவ் என இதில் எதை வாங்கலாம் என்று இப்போதே பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டுக்காரரிடம் எல்லாம் கேட்காதீர்கள். இது முழுக்க முழுக்க உங்களுக்காக நான் கொண்டு வந்திருக்கும் திட்டம்! பெண்கள்தான் டிசைட் பண்ண வேண்டும்!
அடுத்த வாக்குறுதி, உரிமைத்தொகை. ரெஸ்ட்டே இல்லாமல் உழைக்கும் என் சகோதரிகளுக்கு – தாய்மார்களுக்கு, நான் ரெஸ்பெக்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம்தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இனி மாதம் ஆயிரம் அல்ல, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்!
இப்போதே பெண்கள் எல்லாரும் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்கள். என்ன கணக்கு தெரியுமா? பொங்கலுக்கு முன்னாடி சொல்லிவிட்டு 3 ஆயிரம்! பிப்ரவரியில் சொல்லாமலேயே 5 ஆயிரம்! ஆக மொத்தம் 8 ஆயிரம்! அடுத்து, இல்லத்தரசி கூப்பன் வழியிலும் ஸ்டாலின் அண்ணன் 8 ஆயிரம் கொடுக்கிறார். ஆக ‘எட்டு+எட்டு, உதயசூரியனுக்குதான் நம் ஓட்டு’ என முடிவெடுத்துவிட்டார்கள். “கொடுத்ததெல்லாம் கொடுத்தார், ஸ்டாலின் அண்ணா யாருக்காகக் கொடுத்தார்? உங்களுக்காகத்தான் கொடுத்தார். ஒட்டுமொத்த தமிழ்நாடு பெண்களுக்கும் கொடுத்தார்!” என என் சகோதரிகள் அனைவருமே மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதுமட்டுமல்ல, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் உதவித்தொகையும், ஆயிரம் ரூபாயிலிருந்து, இனி ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் என அனைத்து உதவித்தொகைகளும் இனி இரண்டு மடங்காக வழங்கப் போகிறோம்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும். காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கப்படும்.
அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப் போகிறோம். கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக 10 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப் போகிறோம். தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வதை எளிதாக்க ஆயிரம் குழந்தைகள் காப்பகங்களை உருவாக்கப் போகிறோம்.
மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் ஷேர் ஆட்டோ வாங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்றுத் தரப்படும். பிசினஸ்-மேன் போன்று, பிசினஸ்-வுமன்களை உருவாக்குவதற்காக, சுய உதவிக்குழு பெண்கள் தொழில் தொடங்க எந்தச் சூரிட்டியும் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்.
பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கும் தொழில் தொடங்கக் கடன் பெறும் உச்சவரம்பு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் ஒரு லட்சம் பேருக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டுமானத் துறையில் திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.
அரியலூர் – தஞ்சாவூர் ரயில் திட்டம் கொண்டு வர ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்படும். இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறக் கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்! நாம் 200 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி பெற்றால்தான் பாசிச பா.ஜ.க.வை எதிர்த்து வலிமையாகப் போராட முடியும்! அதற்கு, குன்னம் தொகுதியில் எஸ்.எஸ். சிவசங்கருக்கும், பெரம்பலூர் தொகுதியில் டாக்டர் ஜெயலட்சுமிக்கும், அரியலூர் தொகுதியில் லதா பாலுவுக்கும், ஜெயங்கொண்டம் தொகுதியில் க.சொ.க. கண்ணனுக்கும் உதயசூரியன் சின்னத்தில் உங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும்.
தமிழ்நாடா? டெல்லியா? என்ற இந்த ஜனநாயகப் போரில் தமிழ்நாடுதான் வெல்ல வேண்டும்! இன்றைக்கு நாடாளுமன்றம் கூடியது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என் அன்புச் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள், நம்முடைய கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா அவர்களும், இந்த நிகழ்ச்சி இருக்கிறதே… எப்படி செல்வது என்றுதான் யோசித்தார்கள். ஆனால், இதைவிட அதுதான் முக்கியம். நம்முடைய உணர்வுதான், நம்முடைய உரிமைதான் முக்கியம். எனவே, அதற்கு செல்ல வேண்டுமென்று நான் கேட்டுக்கொண்டதன் காரணமாக இன்றைக்கு அவர்கள் டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள்.
எனவே, நம்முடைய எம்.பி.-க்களின் குரலாக, அந்தக் கறுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு அவர்கள் குரல் கொடுக்க இருக்கிறார்கள். அங்கு நாளைய தினம் வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. எனவே அவர்களின் சார்பிலும் உங்களிடத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், ஏதோ நான் முதலமைச்சரோ, 30 பேர் அமைச்சரோ, நம்முடைய கூட்டணியில் 200 பேர் எம்.எல்.ஏ.-வோ ஆக வேண்டும் என்பது மட்டுமல்ல; நம்முடைய தமிழ்நாட்டைக் காக்க, கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்.
தொகுதி மறுவரையறையை அடுத்து இவர்கள் இன்னும் மோசமான திட்டங்களை வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க.விடம் தமிழ்நாடு சிக்கினால், ஜம்மு காஷ்மீரை உடைத்தது போன்று தமிழ்நாட்டையும் மூன்று யூனியன் பிரதேசமாகத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவார்கள். துணைநிலை ஆளுநரை வைத்துப் புதுச்சேரியில் எப்படி அராஜகம் செய்கிறார்களோ, அதே அராஜகம் நம்முடைய ஊரில் நடக்கும்!
அதனால்தான் சொன்னேன்… அ.தி.மு.க. அடிமைகள் மீண்டும் வந்தால் தமிழ்நாடு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்! நாம் செலுத்தும் வாக்குக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய்விடும்!
அதனால், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, 2026 தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பெரம்பலூர் மற்றும் அரியலூர் மக்கள் மாபெரும் வெற்றியைத் தர வேண்டும்! NDA எனும் New Delhi Alliance-ஐ ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்! ஏழாவது முறையும் கழக அரசுதான்! முதலமைச்சராக இரண்டாவது முறையும் இந்த அடியேன் ஸ்டாலின்தான். இனி எப்போதுமே கழக அரசுதான் என்ற நிலையை உருவாக்குவோம்! அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை நாங்கள் வழங்குவோம். நாடு வளம் பெற, நல்லாட்சி தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! நன்றி, வணக்கம்! என பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடந்தது. வேப்பூர் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் சி.ராஜேந்திரன் வரவேற்றார். முதன்மை செயலாளரும், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைஅமைச்சருமான கே.என். நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்ர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் எம்.பி அருண்நேரு, சட்ட மன்ற உறுப்பினர்கள் பெரம்பலூர் ம.பிரபாகரன், அரியலூர் கு.சின்னப்பா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் சி.ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் ரமேஷ், அரியலூர் ம.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் வெ.ஜெயராமன், அரியலூர் க.நடராஜன், மஜ கட்சி மாவட்டச் செயலாளர் முகமது யூனுஸ், சிவசேனா கட்சி மாவட்ட பொறுப்பாளர் பா.பரஞ்சோதி, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் குரல் வள்ளுவன்,
தேதிமுக மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் துரை. சிவஐயப்பன், அரியலூர் ராம.ஜெயவேல், மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயசீலன், மமக மாவட்டசெயலாளர்கள் பெரம்பலூர் அ.குதரத்துல்லா, அரியலூர் அ.அக்பர் அலி இந்திய தொழிலாளர் கட்சி நிறுவனர் தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன், தவிதொ கட்சி மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் மாவட்ட செயலாளர் ரினோ பாஸ்டின், விசிக மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் ந.கிருஷ்ணகுமார், அரியலூர் அங்கனூர் சிவா, ரா.கதிர்வளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சர்புதீன் மாவட்ட செயலாளர் தி.க மாவட்ட தலைவர்கள் சி.தங்கராசு, விடுதலை.நீலமேகம், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர்.முகமது ரபிக், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர், முத்துகுமார், கொ.ம.தேக மாவட்ட செயலாளர் இளையப்பன்,இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் சி.மாரியம்மாள், எம.ஜி,ஆர் கழகம் மாவட்ட செயலாளர் மணிவேல், தமிழர் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் ரா.அய்யப்பன் சேர்வை உள்பட மதசார்பற்ற கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். வேப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தி.மதியழகன் நன்றி கூறினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497