பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமையில் பெரம்பலூரில் நடந்தது.
கூட்டத்தில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமத்துவ மக்கள் படை கட்சியின் நிறுவனர் சிவகாமியை வெற்றி பெற வைப்பதற்கு கட்சி நிர்வாகிகள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பேசியதாவது :
திமுக நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்ப்படும். ஆட்சி மாற்றத்தின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் உட்பட தமிழகத்தில் எவ்வித மக்கள் திட்டங்களையும் அதிமுக செயல்படுத்தவில்லை.
தற்போது பெரம்பலூரில் போட்டியிடும் வேட்பாளரை கூட்டணி கட்சி வேட்பாளர் என நினைக்காமல் நம் கட்சி வேட்பாளர் என கருதி அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். சிவகாமி படித்தவர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.,அதிகாரி அதனால் மக்கள் பிரச்சினைகளில் சிறப்பாக செயல்படுவார்.
அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கலைஞர் சிறப்பாக முத்தாய்ப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதிமுக இன்னும் தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை. வருமா வராதா என தெரியவில்லை.
முதலில் வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை பார்த்து தான் பா.ம.கவும், பாரதிய ஜனதா கட்சியும் காப்பியடித்துள்ளது. ஆனால் திமுக காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டதாக தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்? என்றார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குன்னம். சி.ராஜேந்திரன் உட்பட திமுக கூட்டணி கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.