பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் பாடாலூரில் கட்சியினருடன் வாக்கு சேகரித்த பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
ஆலத்தூரில் பகுதியில் இருந்து குன்னம் வட்டாசியர் அலுவலகத்திற்கு சுமார் 40 கி.மீ தூரம் சென்று வருவாய் துறை சான்றிதழ் உட்பட பல வேலைகளுக்கு சென்று வந்தனர்.
ஆலத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுச் செயலாளர் முதலமைச்சர் அம்மா அவர்கள் உடனே ஆலத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்கா 2012 ஆம் ஆண்டு உத்திரவிட்டார். ரூ. 3.5 கோடி மதிப்பில் புதிய அலுவலகமும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிக அளவு சின்ன வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. விலை வீழ்ச்சியின் போது பாதுகாத்து சேமித்து விற்பனை செய்ய சின்ன வெங்காயம் குளிர்பதன கிடங்கு ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
பாடாலூர் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ. 36 கோடி மதிப்பில் பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடாலூரில் ஜவுளிப்பூங்கா திட்டம் செயல் முறையில் உள்ளது. வேலைவாய்ப்பு அதிகரிக்கபட்டுள்ளது. கிடப்பில் உள்ள பல்வேறு திட்டங்களை கொண்டு வரவும், தாலிக்கு தங்கம், கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்திட அம்மா அவர்களை 6வது முறையாக மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக அரியனையில் ஏற்ற, பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதியில் மீண்டும் அம்மா அவர்களின் ஆசியுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அப்போது ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே. கர்ணன், ஒன்றிய சேர்மன் வெண்ணிலா ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் பாடாலூர் ஊராட்சி மன்ற தலைவருமான வீரமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் ராமலிங்கம், ஆலத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாடாலூர் பிச்சை உள்பட கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பொது ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாடாலூர் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற போது ஆர்த்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வாழ்த்தி அனுப்பினர். மேலும், சில இடங்களில் வெப்பத்தை குறைக்க நீர், மோர், சர்பத் உள்ளிட்ட பானங்களையும் வழங்கினர்.
பின்னர், பாடாலூர், திருவிளக்குறிச்சி, பெருமாள்பாளையம், இரூர், ஆலத்தூர், நாராணமங்கலம், மருதடி, ஈச்சங்காடு, விஜயகோபாலபுரம் ஆகிய ஊர்களில் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.