Another problem for Sterlite: bauxite smuggling for 12 years in Kolli Hills: Social activist Puish Manush Information
நாமக்கல்: கொல்லிமலையில் சட்ட விரோதமாக பாக்சைட் வெட்டிக் கடத்தப்பட்டதில் தொடர்புடைய மேட்டூர் மால்கோ நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு அளித்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சேளூர் நாடு, வாழவந்திநாடு, அரியூர் நாடு பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களில் இருந்து பாக்சைட் வெட்டி எடுத்துக்கொள்ள மேட்டூரில் உள்ள மால்கோ நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு 1966ல் வழங்கப்பட்ட அனுமதி கடந்த 1996 ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால், அதன்பிறகும் அனுமதியே இல்லாமல் அந்த நிறுவனம் பாக்சைட் பிரித்து எடுக்க மண் அள்ளிவந்தது. இங்கு தொடர்ந்து மண் எடுக்க கூடாது என நான் கடந்த 2008 ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
இதனையடுத்து நீதிமன்றம் அங்கு மண் எடுக்க மால்கோ நிறுவனத்துக்கு தடை விதித்து அதே ஆண்டு உத்தரவிட்டது. மால்கோ நிறுவனம் வேதாந்தா குழுமத்தின் கிளை நிறுவனம்.
தற்போது ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பொதுசொத்துக்கு சேதம் விளைவித்ததாக பொதுமக்கள் 13 பேரை போலீசார் சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஆனால் அனுமதி இல்லாமல் தொடர்ந்து 12 ஆண்டுகளாக தினமும் 400 லோடு அளவுக்கு கொல்லிமலையில் உள்ள இயற்கை வளத்தை கொள்ளையடித்துச் சென்ற நிறுவனம் மீது வழக்குப்பதிவுகூட செய்யப்படவில்லை.
அரசு சொத்தை பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளையடித்துள்ள மால்கோ நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையெடுக்க வேண்டும். இதற்கு முன்வரவில்லையெனில் வரும் ஜூன் 1 ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.