Anti-Socialists broke the lock of government school near Perambalur
பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கல்வி பயிற்றுவிக்கும் இப்பள்ளியில் 500க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளி வேலை நேரம் முடிந்த பின்னர் வழக்கம் போல் ஆசிரிய, ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனைத்தொடர்ந்து இன்று காலை பள்ளிக்கு வந்து பார்த்த போது, பள்ளி வளாகத்திலுள்ள 10ஆம் வகுப்பறையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு, நாற்காலிகள், குடிநீர் குழாய்கள் மற்றும் மேற்கூரை ஓடுகள் உடைக்கப்பட்டு, உள்ளே காலி மது பாட்டில்களும், சீட்டு கட்டுகளும் கிடந்துள்ளது.
மேலும் கதவு திறந்து கிடந்ததால் வகுப்பறைக்குள் பாம்பு ஒன்றும் பதுங்கி இருப்பதை கண்ட மாணவ, மாணவியர்கள் அதிர்ச்சியடைந்து வகுப்பறையை விட்டு
அலறியடித்து வெளியே ஓடி வந்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்கினங்க ஊர் பொது மக்கள் சிலர் உதவியுடன் வகுப்பறையிலிருந்த பாம்பு பிடிக்கப்பட்டு பள்ளி வளாகத்தை
விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர்.
எனவே கோவில்களாக கருதப்படும் கல்வி நிலையங்களில் இது போன்ற சமூக விரோத செயல்கள் கூடாரமாக மாறாமல் தடுக்க, அனைத்து அரசுப்பள்ளியிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமறிப்பதோடு, கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டுமென்றும், காவலாளிகளை பணியமர்த்த வேண்டும் என்றும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் மரகதவள்ளி புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுமேற்கொண்டு வகுப்பறையின் பூட்டை உடைத்து சமூக விரோத செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே ஊருக்கு நடுவே காம்பவுண்ட் சுவர் இல்லாமல் பள்ளி கட்டிடம் உள்ளதால் கிராம மக்களில் சிலர் கட்டுமான பொருட்களைகொட்டி வைத்துள்ளதோடு,
சைக்கிள், டூவீலர், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.
இதனால் மாணவ, மாணவிகள் விளையாட முடியாமலும், போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் ஒரு பகுதியிலும், மரத்தடியிலும்
மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் பள்ளியை சுற்றி முட்புதர் மண்டி கிடப்பதாகவும், சமையல் அறை சுகாதாரமற்ற முறையில் சாக்கடைக்கு அருகே இருப்பதாகவும் உணவு சமைத்த பின்னர் கழுவி சுத்தம் செய்ய வைத்துள்ள பாத்திரங்களை நாய்கள், பறவைகள் அசுத்தம் செய்வதாக குற்றம் சாட்டும் பொது மக்கள், அனைத்து அடிப்படை வசதிகளுடன் மாற்று இடத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கென கிராம மக்களின் பங்களிப்பாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு லட்ச ரூபாய் பணம் செலுத்தியும், புதிய பள்ளி கட்டிடம் கட்ட மாவட்ட
நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
பொது மக்கள் வடக்கு மாதேவி அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் நலனில் அக்கறை கொண்டு விரைவில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.