Apply for Rural Skill Examinations for Rural students – Educational Announcement
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :
தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான ஊரகத்திறனாய்வுத் தேர்வு (TRUSTS EXAM ) செம்டம்பர் – 18 மாதம் நடைபெறவுள்ளது. இத்திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு ஊரகப் பகுதிகளில் (கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப்) அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் தொடர்ந்து 9-ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் தகுதி படைத்தவராவார்கள். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000- க்கும் மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய்த் துறையினரிடமிருந்து வருமானச் சான்று பெற்று அளித்தல் வேண்டும்.
தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய் சான்றிதழினை இணைத்து தேர்வுக் கட்டணம் ரூ.5- மற்றும் சேவைக் கட்டணம் ரூ.5- ஆக மொத்தம் ரூ.10- ஐ பள்ளித் தலைமையரிசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தலைமையாசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (பெரம்பலூர் மற்றும் வேப்பூர்) சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கு 11.07.2018 முதல் 25.07.2018 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு (50 மாணவியர்கள் மற்றும் 50 மாணவர்கள்) 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் காலத்திற்கு படிப்பு உதவித் தொகை ஆண்டு தோறும் ரூ.1000- வீதம் வழங்கப்படும். தேர்வெழுத வரும் தேர்வர்கள் கருப்பு மை பந்து முனை பேனாவினை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.