Avin Milk Company ..? Is the gold mine looted by the managing directors …? Tamil Nadu Dairy Agents Workers Welfare Association

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநில தலைவர், சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை:

தமிழக அரசின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையமான ஆவின் நிறுவனத்தின் மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணைகளிலும், அம்பத்தூர் பால் பொருட்கள் தொழிற்சாலையிலும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்த சுமார் 450தொழிலாளர்களை நிர்வாக இயக்குனர் திரு. வள்ளலார் ஐஏஎஸ் அவர்கள் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பது கொரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்கள் எவரையும் பணி நீக்கம் செய்யக்கூடாது என்கிற மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிரான செயலாகும். தினக்கூலி தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து, தமிழக அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் செயல் என்பதால் நிர்வாக இயக்குனரின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏனெனில் இது வரை ஆவின் பால் பண்ணைகளிலும், பால் பொருட்கள் தொழிற்சாலையிலும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்த தொழிலாளர்களுக்கு ஆவின் தரப்பில் இருந்து நாளொன்றுக்கு 340.00ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர்களை பணி நீக்கம் செய்து விட்டு அவர்கள் செய்த பணியை தனக்கு சாதகமான நபரிடம் ஒப்பந்த தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு 490.00ரூபாய் வீதம் சம்பளமாக வழங்கிட முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார் இதன் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு சுமார் 3கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.

அதுமட்டுமின்றி அந்த ஒப்பந்ததாரர் தொழிலாளி ஒருவருக்கு தினசரி 300.00ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்குவதோடு பணிக்கு நாளொன்றுக்கு ஒவ்வொரு பால் பண்ணைகளுக்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை குறைவாக அனுப்பி முழுமையான தொழிலாளர்களை அனுப்பியதாக கணக்கு காட்டுவதின் மூலம் ஆண்டுக்கு சுமார் 1கோடி ரூபாய்க்கு மேல் ஆவினுக்கு இழப்பு ஏற்படும்.

ஆக மொத்தம் ஆவின் நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் ஆண்டுக்கு சுமார் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற திட்டத்தோடு நிர்வாக இயக்குனர் திரு. வள்ளலார் ஐஏஎஸ் அவர்கள் செயல்பட்டு தினக்கூலி தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு வரை ஆவின் நிர்வாக இயக்குனராக இருந்த திரு காமராஜ் ஐஏஎஸ் அவர்கள் சென்னையில் 65மொத்த விநியோகஸ்தர்களிடமிருந்த ஆவின் பால் விநியோகத்தை ஒரே நாள் இரவில் 11 C/F ஏஜென்டுகளிடம் கை மாற்றி ஒப்படைத்து பல கோடி ரூபாய் ஆதாயம் அடைந்து ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் 15கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தி விட்டு சென்றார். திரு. காமராஜ் ஐஏஎஸ் அவர்கள் விட்டுச் சென்ற ஊழல் பணிகளை செவ்வனே செய்திடும் வகையில் திரு வள்ளலார் ஐஏஎஸ் அவர்களும் செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வரை 6மொத்த விநியோகஸ்தர்களிடமிருந்த ஆவின் பால் விநியோகத்தை மாற்றிட கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி கணேசன் என்பவரிடம் விண்ணப்பம் பெற்று அன்றைய தினமே அவருக்கு C/F ஏஜென்ட் உத்தரவு வழங்கியுள்ளதோடு, மீதமுள்ள மொத்த விநியோகஸ்தர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. 6மொத்த விநியோகஸ்தர்களிடமிருந்த ஆவின் பால் விநியோகத்தை ஒரேயொரு C/Fஏஜென்ட்டிடம் ஒப்படைத்ததின் மூலம் ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் 1கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் வகையில் நிர்வாக இயக்குனர் திரு வள்ளலார் நடந்து கொண்டிருக்கிறார். அரசு துறையில் விண்ணப்பம் கொடுத்த ஒரே நாளில் பயனாளிக்கு அன்றைய தினமே உத்தரவு வழங்கப்பட்டது ஆவின் நிறுவனமாகவும், அந்த அபூர்வ உத்தரவை வழங்கிய அதிகாரி திரு. வள்ளலார் அவர்களாகவும் மட்டும் தான் இருக்க முடியும் இது ஒரு வரலாற்று சாதனை என்றால் அது மிகையல்ல.

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பேற்று பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு நன்மை செய்திடவும், ஆவினை வளர்ச்சிப் பாதையிலும் கொண்டு செல்ல வேண்டிய நிர்வாக இயக்குனர்கள் தங்க முட்டை போடுகின்ற வாத்தாக திகழும் ஆவின் வயிற்றை அறுத்து தமிழக அரசுக்கும், பால் உற்பத்தியாளர்களுக்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வளவு பெரிய தவறுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் பால்வளத்துறையின் அமைச்சராக இருக்கும் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கும், பால்வளத்துறை செயலாளர் அவர்களுக்கும் இவை தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.

எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. வள்ளலார் அவர்கள் பணி நீக்கம் செய்த தினக்கூலி பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்திடவும், அதே நேரம் மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணைகளிலும், அம்பத்தூர் பால் பொருட்கள் தொழிற்சாலையிலும் பணி செய்ய ஒப்பந்த அடிப்படையில் வழங்கிய ஆணையை ரத்து செய்திடவும், வள்ளலார் ஐஏஎஸ் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர் செய்துள்ள ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!