CITU protest in Perambalur against the central government.தொழிலாளர் விவசாயிகள் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கபட்டதையடுத்து பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் முன்பு சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிபிஎம் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜாங்கம். ஆட்டோ சங்க நிர்வாகிகள் சி.சண்முகம், மல்லீஸ்குமார், ரெங்கநாதன், சிபிஎம் நிர்வாகிகள் எம்.கருணாநிதி, பி.கிருஷ்ணசாமி, பி.ரெங்கராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதலாளிகளுக்கு ஆதரவான தொழிலாளர் விவசாய சட்டங்களை திரும்ப பெறவேண்டும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை ரத்து செய்யவேண்டும், கொரோனா தொற்று என்ற பெயரில் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், அமைப்புசாரா கட்டுமானம், ஆட்டோ, தையல், மற்றும் மோட்டார் வாகன நலவாரியத்தை சீரமைக்க வேண்டும், பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு இபிஎப் பிடித்தம் மற்றும் பணப்பயன்களை அரசாணைப்படி வழங்க வேண்டும் கொரோனா நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ.7,500 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.