Civil service Competitive Examination: Timeline extension to join the fishermen community graduate training
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தம்) சார்பில் கடந்த 11.07.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததில் மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சார்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 31.10.2017 பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து விண்ணப்பதாரர்களன் நலனுக்காக சிறப்பு ஆயத்த பயிற்சியில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 05.11.2017 பிற்பகல் 5.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.