Collector Mrinalini Assumes Charge as Administrative Officer of the Perambalur-Ariyalur District Cooperative Milk Producers’ Union.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூரில் திருவிளக்குறிச்சியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள PRD 144 பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு செயலாட்சியராக பெரம்பலூர் கலெக்டர் ந.மிருணாளினி இன்று பணிப்பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை விவாகர எல்லையாகக் கொண்டு இதன் தலைமை அலுவலகம் திருச்சியில் செயல்பட்டு வந்தது.
இதில் 2 பால் பண்ணைகள், 3 பால் குளிரூட்டும் நிலையங்கள், 65 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் செயல்பட்டு வந்த ஒன்றியத்திற்கு, 669 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5.25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை பிரித்து, பெரம்பலூரில் உள்ள பாடாலூர் பால் பண்ணையை தலைமையிடமாகக் கொண்டு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விவாகர எல்லைகளை உள்ளடக்கிய, பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் புதிதாக அமைத்திட தமிழக அரசால் கடந்த 02.03.2026 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து பெரம்பலூர் துணைப்பதிவாளர் (பால்வளம்) திருமதி.ஜோ.விஜயா அவர்களால் 09.03.2026 அன்று ப்பி.ஆர்.டி.144 பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பதிவு செய்யப்பட்டது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 1 பால் பண்ணை, 2 பால் குளிரூட்டும் நிலையங்கள், 24 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களும், 303 பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.00 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கென தனித்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் அமைக்கப்பட்டமையால் இம்மாவட்ட மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள இயலும். கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமப்புறங்களில் கூடுதல் பால் சேகரிப்பு மையங்கள் அல்லது புதிய சங்கங்கள் உடனடியாக தொடங்க முடியும் என்பதால் பால் உற்பத்தியும் அதிகரிக்கும். சங்கத்திற்கு பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு பாலின் தரத்திற்கு ஏற்ற சரியான விலை, ஊக்கத்தொகை, அரசு நலத்திட்டங்கள் தாமதமின்றி நேரடியாக வழங்கப்படும். கால்நடை பராமரிப்பு, கால்நடை மருத்துவ சேவைகள் மற்றும் கால்நடை மேம்பாட்டு திட்டங்கள் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு எளிதில் கிடைக்கும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி ஒன்றியத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லாதமையால், நேரச் செலவும் போக்குவரத்து செலவும் குறைவதோடு இம்மாவட்டங்களில் பால் உற்பத்தி மற்றும் பால் சார்ந்த தொழில்கள் வளர்ச்சி பெறுவதன் மூலம் கிராமப்புற மக்களின் வருமானம் உயர்ந்து பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்நிகழ்வில் துணைப்பதிவாளர், கூட்டுறவு சார்பதிவாளர்கள், உதவி பொது மேலளார்கள், மேலளார், விரிவாக்க அலுவலர்கள், சங்க செயலளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497