Collector Venkatapriya launches Chief Minister’s Nutritious Vegetable Garden project in Perambalur!

பெரம்பலூர் கலெக்டர் ஆபீசில், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட காய்கறி தொகுப்பு, 8 ஊட்டச்சத்து தோட்டம் செடி தொகுப்பு, 12 வகை காய்கறி விதை பொட்டலம் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு கலெக்டர் வெங்கட பிரியா வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி சேர்மன், குன்னம் சி. ராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, கலெக்டர் வெங்கடபிரியா பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். இதன்தொடர்ச்சியாக தமிழகத்தின் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்களின் வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மாடிப் பகுதிகளில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மூலிகைப் பயிர்கள் பயிரிட்டு பயன்பெறும் விதமாக முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கை முறையில் மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து வைத்துள்ளார்கள்.

இத்திட்டங்கள் அனைத்தும் பெரம்பலூர் மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் நகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் மாடித்தோட்டம் அமைக்க தேவையான 6 வகை காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள்-6 எண்கள், இரண்டு கிலோ தென்னைநார் கட்டிகள்-6 எண்கள், உயிர் உரங்கள்-400 கிராம், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் – 200 கிராம், இயற்கை பூச்சிக்கொல்லி 100மி.லி. அடங்கிய இடுபொருட்கள் உள்ளடக்கிய ரூ.900 மதிப்புடைய மாடித் தோட்ட தளைகள் ரூ.675 அரசு மானியத்துடன் ரூ.225க்கு சலுகை விலையில் 500 பயனாளிகளுக்கு (அரசு மானியம் ரூ.3.37 லட்சம் மதிப்பீட்டில்) வழங்கப்பட உள்ளது.

ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காய்கறி தோட்டம் அமைத்து தங்களின் அன்றாட உணவில் சத்தான காய்கறிகளை உண்ணும் வகையில் கத்தரி, வெண்டை, தக்காளி, தட்டைப்பயிறு, பீர்க்கன், புடலை, முருங்கை, புஸ்பீன்ஸ், சுரைக்காய், கொத்தவரை, பரங்கி, கீரைகள் அடங்கிய 12 வகை காய்கறி விதை தளைகள் உள்ளடக்கிய ரூ.60 மதிப்புடைய காய்கறி விதை தளைகள் ரூ.45 அரசு மானியத்துடன் ரூ.15க்கு சலுகை விலையில் 2,500 பயனாளிகளுக்கு (அரசு மானியம் ரூ.1.12 லட்சம் மதிப்பீட்டில்) வழங்கப்பட உள்ளது.

“உணவே மருந்து” என்ற கூற்றின்படி, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி பல்வேறு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மூலிகைச் செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியுடைய பழங்களான பப்பாளி, எலுமிச்சை, முருங்கை கறிவேப்பிலை, திப்பிலி, கற்பூரவள்ளி, கற்றாழை மற்றும் புதினா ஆகிய 8 செடிகள் கொண்ட ஊட்டச்சத்து தளைகள் உள்ளடக்கிய ரூ.100 மதிப்புடைய ஊட்டச்சத்து தளைகள் ரூ.75 அரசு மானியத்துடன் ரூ.25க்கு சலுகை விலையில் 3,000 பயனாளிகளுக்கு (அரசு மானியம் ரூ.2,25,000 லட்சம் மதிப்பீட்டில்) வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!