Consultation with village panchayat Presidents of Perambalur district about celebrating 75 Independence Day well!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் , 75 வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை கிராம பகுதிகளில் சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் வெங்கடபிரியா பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களும் 75 வது சுதந்திர திருநாளை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றியும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளை போற்றும் விதமாக கொண்டாடுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கொடிகள் அனைத்து கிராம ஊராட்சிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி தலைவர்கள் தலைமையில் தங்களது பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 13.08.2022 காலை முதல் தேசியக்கொடியினை உரிய மாண்புடன் ஏற்ற வேண்டும். தேசியக் கொடியை ஏற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவதற்கான பணிகளை கிராம ஊராட்சி தலைவர்கள் முன்னின்று மேற்கொள்ள வேண்டும். 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாளை 13.08.2022 காலை ஏற்றிய தேசிய கொடி 15.08.2022 மாலை 06.00 மணி வரை தொடர்ந்து பறக்க செய்யலாம். மேலும் அன்று மாலை உரிய மாண்புடன் கொடியை இறக்க வேண்டும்.

சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் 31.08.2022 வரை மேற்கொண்ட வரவு செலவுகள் குறித்த பதாகைகள் பொது மக்களுக்கு நன்கு தெரியும் வண்ணம் நிறுவ வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெறுவது தொடர்பாக மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .

பொதுமக்களை அதிகளவில் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க கிராம ஊராட்சி தலைவர்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு கிராம சபை கூட்டங்களில் என்னென்ன வரவு செலவுகள் வாசிக்கப்படுகிறது குறித்து பொறுமையாகவும் பொதுமக்களுக்கு நன்றாக விளக்கும் வகையில் எடுத்துரைக்க வேண்டும். மேலும் சிறப்பான முறையில் கிராம சபை கூட்டங்களை நடத்தி பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற கிராம ஊராட்சி தலைவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் கணபதி, உதவி திட்ட அலுவலர்கள் முருகன், ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, ஊராட்சித் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!