Contact numbers for rehabilitation of orphans due to corona exposure: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா பெருந்தொற்று காரணமாக தாய், தந்தை, பெற்றோர், குடும்ப காப்பாளரை இழந்த குழந்தைகள் குறித்த தகவல்கள் தனி நபர் மூலமாகவோ, தொண்டு நிறுவனம் மூலமாகவோ, சமூக செயற்பாட்டாளர்கள் மூலமாகவோ மற்றும் பிற அரசுத் துறை மூலமாகவோ கிடைக்கப் பெறின், உடனடியாக அக்குழந்தைகளின் மறுவாழ்விற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக குழந்தைகள் நலக்குழு முன்பாக அக்குழந்தைகளை ஆஜர்படுத்தி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அளிக்கவேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தாய், தந்தை, பெற்றோர் மற்றும் குடும்ப காப்பாளரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறியுள்ள குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனம் மூலம் சிறப்பு முகாம் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே ஆதரவற்றவர்களாக மாறியுள்ள குழந்தைகள் பற்றிய தகவல்கள் ஏதேனும் இருப்பின் உடனே கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகினை 04328 – 275020 என்ற தொலைபேசி எண்ணிலோ, 99945 34987 என்ற கைபேசி எண்ணிலோ, சைல்டு லைன் 1098 என்ற இலவச எண்ணிலோ தொடர்புகொண்டு அக்குழந்தைகள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.
கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள்) அனைவரும் சிறப்பு கவனம் செலுத்தி குழந்தைகளை கண்காணித்து தகவல் தெரிவிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.