Corona preventive action: Vegetable mobile sales vehicles, Perambalur MLA inaugurated Prabhakaran flag.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் இருப்பிடங்களுக்கே சென்று காய்கறிகளை வழங்குவதற்கான நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்த, அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த 24.05.2021 முதல் ஒரு வார காலத்திற்கு எவ்வித தளர்வும் இல்லாத ஊரடங்கு தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலங்களில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற பொருட்கள் எவ்வித இடர்பாடுமின்றியும், தட்டுப்பாடுமின்றியும் கிடைத்திட பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று விற்பனை செய்திட நடமாடும் காய்கறி வாகனங்களை இயக்கிட உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், உழவர் சந்தை விவசாயிகளின் மூலம் 10 நான்கு சக்கர வாகனங்கள் மூலமாகவும், வேளாண் விற்பனைக் கூடத்தின் மூலம் 16 நான்கு சக்கர வாகனங்கள், 30 இரு சக்கர வாகனங்கள், 3 ஆட்டோ வழியாகவும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 8 நான்கு சக்கர வாகனங்களின் மூலமாகவும், பெரம்பலூர் நகராட்சியின் சார்பில் 34 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 101 வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று காய்கறிகளை நியாயமான விலையில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்று காலங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பதற்காகவும், தொற்றுநோயின் தொடர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காகவும், அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் இல்லங்களுக்கே சென்று நியாயமான விலையில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாகனங்களில் வழியாக பொருட்களை வாங்கும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து சரியான முறையில் முகக்கவசம் அணிந்து, கூட்டமாக கூடுவதை தவிர்த்து பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதன்மூலம் கொரோனா பெருந்தொற்றானது பரவாமல் தடுக்கப்படும். தமிழக அரசின் சார்பில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பிற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, துணை இயக்குநர் (வேளாண் விற்பனை) சிங்காரம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாத்திமா, அலுவலர் செந்தமிழ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.