Dengue fever in Perambalur district has no deaths yet: Collector V.santha

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விளக்கும் வகையில் நேற்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்தாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி டெங்குக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ள பகுதிகளாக ஊரக பகுதிகளில் 55 இடங்களும், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 19 பகுதிகளும் என மொத்தம் 74 பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் தற்போது ஊரகப் பகுதிகளில் 3-ம், நகரப் பகுதிகளில் ஒன்றும் என மொத்தம் 4 பகுதிகளில் மட்டுமே டெங்கு பாதிப்பு காணப்படுகிறது.

இந்தப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் முற்றிலுமாக ஒழித்து பெரம்பலூh; மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாற்றிட மாவட்ட நிh;வாகம் முழுவீச்சில் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இரத்த அணுக்களின் அளவை கண்டறிவும் இயந்திரம் பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவ மனையிலும், காரை அரசு மருத்துவமனையிலும், குன்னம், செட்டிகுளம், வி.களத்தூர் மற்றும பூலாம்பாடி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பில் உள்ளது.

தேவையான அளவு இரத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச்சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளின் ஒத்துழைப்புடன் ஊரகப்பகுதிகளில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் டெங்கு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் ஒரே நாளில் சுமார் 6000 – க்கும்மேற்பட்ட மாணவ-மாணவிகள், அரசுத்துறை அலுவலகர்கள், களப்பணியாளர்கள் குழுவாகச் சென்று மாபெரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுவரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த 260 நபர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு, ரூ.4,09,000 – மதிப்பில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் உள்ளிட்டவை சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

காய்ச்சல் என்று அரசு மருத்துவமனைக்கு வரும் நபர்களுக்கு முறையான சிகிச்சைகள் உடனுக்குடன் அளிக்கப்பட்டு வருகின்றது. இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை டெங்குக் காய்ச்சலால் இறப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் போல் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கைள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் 47 கிராமங்கள் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு, இப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் விதமாக 307 முதல் பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தீயணைப்புத் துறை மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை மூலம் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் பாதிக்கப்பட்ட நபர்களை பாதுகாப்பாக வெளியேற்றி தங்க வைத்திட 67 இடங்களில் பொது நிவாரண மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்துத்துறை அலுவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மனோகரன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.செல்வராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை) சுதர்சன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சம்பத், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!