DMK-a staggering 60 people arrested were burnt in perambalur effigy Speaker of TN Assembly
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் (உருவபொம்மை) கொடும்பாவியை கொளுத்திய திமுகவினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
சட்டப்பேரவையிலிருந்து இன்று திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர் அமளியில் ஈடுபட்டதாக கூறி சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
நமக்கு நாமே பயணம் மேற்கொண்டவர்கள் இங்கு ஆட்சியை பிடிக்கவில்லை என்று அதிமுக உறுப்பினர் குணசேகரன் பேரவையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், அவைக்குறிப்பில் இருந்து அதிமுக உறுப்பினர் குணசேகரன் பேசியதை நீக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் அதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அமளி தொடர்ந்து நிலவியதால் திமுகவினரை அவையிலிருந்து வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தொடர்ந்து அவையில் இருந்தனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து திமுக எம்எல்ஏக்களை அவையில் இருந்து காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் 88பேரை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது இன்று கோட்டைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா அவைக்கு வரவில்லை. வரும் 22ம் தேதி காவல் துறை குறித்த மானியக் கோரிக்கை இருப்பதால், திமுக உறுப்பினர்களை அவைக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகவே சதி திட்டம் தீட்டி, திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர் என்று கூறினார்.
இதனையொட்டி இன்று பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் குன்னம்.சி.இராஜேந்திரன் தலைமையில் புறப்பட்ட 60க்கும் மேற்பட்ட திமுகவினர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் (உருவபொம்மை) கொடும்பாவியை கொளுத்தினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு தடுத்து எரிந்து கொண்டிருந்த கொடும்பாவியை தண்ணீர் ஊற்றி அணைத்ததோடு, கொடும்பாவி கொளுத்திய 60 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.