Do not dispense pills to the public without a doctor’s prescription: Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடப்பிரியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் கொரோனா வைரஸ் தொற்று நோயின் இரண்டாம் அலையினை கட்டுப்படுத்திட பல்வேறு தீவிர நடவடிக்கைகளையும், தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்து செயல்படுத்தி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றானது உலகளவில் பரவி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும் பொதுமக்கள் தங்கள் அறியாமையினால் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்கு அருகிலுள்ள மருந்து கடைகளுக்கு சென்று மருந்து மாத்திரைகள் வாங்கி சுய மருத்துவம் செய்து கொள்ள முயல்கின்றனர். இதனால் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு என தெரியாமலேயே உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மருந்தகங்களை மருந்தக ஆய்வாளர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பெரம்பலூர் சரக பகுதியிலுள்ள மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அட்டவணை மருந்துகளை வழங்கிய லாடபுரம், மேலப்புலியூர் மற்றும் சிறுவாச்சூர் ஆகிய 3 கடைகள் கண்டறியப்பட்டன. அதன்பேரில் அம்மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, மருந்து கடைகளின் உரிமையாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் வீரியம் கருதி பொதுமக்களுக்கு அட்டவணை மருந்துகளை வழங்ககூடாது. கொரோனா வைரஸ் தொற்று நோயினை கட்டுப்படுத்திட தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!