Drip irrigation district farmers In Perambalur set up a special camp to apply
அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2016-2017-ஆம் ஆண்டிற்கு நுண்ணீர் பாசனத் திட்டத்தில் தோட்டக் கலைப்பயிர்கள் மற்றும் வேளாண்மை பயிர்களுக்கு சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்க 1431.76 எக்டருக்கு ரூ.985.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதில் 80 சதவீதம் பொது பிரிவினருக்கும், 19 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் 1 சதவீதம் பழங்குடியினருக்கும் நிதியினம் ஒதுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக 2 எக்டரும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் அதிகபட்சம் 5 எக்டரிலும் நுண்ணீர்பாசன அமைப்புகளை தங்கள் நிலங்களில் அமைத்துக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் பயன்பெற வேப்பந்தட்டை, பெரம்பலூர், குன்னம் மற்றும் ஆலத்தூர் உள்ளிட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 03.09.2016 தேதி சனிக்கிழமை அன்று சொட்டு நீர்பாசனம் அமைக்க இருக்கும் விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில் விவசாயிகளுக்கு தேவையான கணிணி சிட்டா, அடங்கல், நிலவரைபடம் மற்றும் சிறு குறு விவசாயிகள் சான்று வழங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகளும் தங்களது குடும்பஅட்டைநகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 எண்களுடன் இந்த முகாமிற்கு வருகை தந்து விண்ணப்பங்கள் அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.