Electrical Substation in the village of Nanai: TN Chief Minister inaugurated by the video display.
தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நன்னையில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமத்தில் 33 / 11 கி.வோ. துணைமின் நிலையம் அமைக்க நன்னை (மேற்கு) கிராம புல எண் 95 / 1-ல் 0.82.0 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, ரூ.3.02 கோடிக்கு மதிப்பீடு ஒப்புதலாகி பணி நிறைவு பெற்ற மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இத்துணை மின் நிலையத்தில் 1 x 8 எம்.வி.ஏ. திறனுள்ள உயரழுத்த மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது. 11 கி.வோ. பரவாய், 11 கி.வோ. கிழுமத்தூர், 11 கி.வோ. ஓலைப்பாடி, மற்றும் 11 கி.வோ. எழுமூர் மின்பாதைகள் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்பட உள்ளது.
நன்னை கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் நன்னை, வேப்பூர், ஓலைப்பாடி, கல்லை, அந்தூர், கிளியூர், பரவாய், கிழுமத்தூர், வடக்களூர், எழுமூர், ஆண்டிக்குரும்பலூர் மற்றும் வரகூர் கிராம பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதோடு, மங்களமேடு துணை மின் நிலையத்தில் தற்போது உள்ள மின் பளு குறைக்கப்பட்டு, அந்த துணை நிலையங்களிலிருந்து மின்சாரம் வழங்கப்படும். மற்ற கிராம பகுதிகளுக்கும் சீரான மின்சாரம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சுமார் 12,036 மின்நுகர்வோர்களுக்கு தரமான மற்றும் சீரான மின் விநியோகம் செய்யப்படும். இத்திட்டம் மத்திய அரசின் தீனதயாள் உபாத்தியாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர், நன்னை துணை மின்நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, நன்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் எம்.பி மா.சந்திரகாசி, குன்னம் எம்.எல்.ஏ .ஆர்.டி.இராமச்சந்திரன் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள், பொதுமக்கள், அதிமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.