Eligible candidates can apply for the Tamil Nadu Chief Minister’s award: Namakkal Collector
தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருது பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
ஆண்டுதோறும் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள், 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்சியாளர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு முதல்வரின் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட உள்ளது.
இதன்படி பரிசாக தலா ரூ.1 லட்சம், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான தங்கப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியன இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இது தவிர விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர், ஒரு நிர்வாகி, ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம், ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நீதிபதி ஆகியோர்களுக்கு முதல்வரின் மாநில விளையாட்டு விருது, ரூ.10ஆயிரத்துக்கு மிகாமல் தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு ஆண்டு செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பெண்கள், எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்படி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, அதனைப் பூர்த்தி செய்து தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று உறையின் மேல் எழுதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை 84 என்ற முகவரிக்கு வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.